பெண்களுக்குத் தவிர்க்கப்பட்ட தொழில்கள் பட்டியல் ரஷ்யாவில் 100 ஆகக் குறைந்துவிட்டது.
சில வருடங்களுக்கொரு முறை ரஷ்ய அரசு அறிவிக்கும் பெண்களுக்கு ஒவ்வாத வேலைகளின் எண்ணிக்கை கடந்த முறையை விட 356 வேலைகளால் குறைந்திருக்கிறது. தொடர்ந்தும் ரஷ்யப் பெண்களுக்குத் தவிர்க்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை 100. 2000 ம் ஆண்டு இதற்கு முதல் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
பாரவண்டியோட்டுதல், ரயிலோட்டுதல், கப்பல் தலைமை மாலுமியாகுதல் ஆகிய சில வேலைகள் இவ்வருடம் முதல் ரஷ்யப் பெண்களுக்குத் திறந்துவிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் கட்டிட வேலை, எரிநெய் – எரிவாயு எடுக்கும் இடங்களில் வேலை, கார் தயாரிப்பு நிறுவனங்களில் வேலை போன்றவையையும் ரஷ்யப் பெண்கள் இனிமேல் செய்ய அரசு அனுமதித்திருக்கிறது.
கையோடு மொஸ்கோவின் மெட்ரோ ரயில்களை இயக்கும் நிறுவனம் 15 பெண் சாரதிகளை வேலைக்கமர்த்தியிருப்பதாக அறிவிக்கிறது.
மிகவும் பலமான தேகபலம் தேவையான தொழில்கள், பெண்களுக்கு ஒவ்வாத வேலையிடங்கள், பெண்களுக்கு மன உழைச்சல் கொடுக்கக்கூடிய வேலையிடங்கள் என்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டுத் தொடர்ந்தும் பெண்களுக்குத் திறக்கப்படாத வேலைகள் இருக்கின்றன. சுரங்கங்களில் வேலைசெய்தல், இரசாயனச்சாலை வேலைகள், தீயணைக்கும் படை, விமான இயந்திரங்களைத் திருத்துவோர், ஆழ்கடல் முக்குளிப்பு போன்றவை தொடர்ந்தும் ரஷ்யாவில் பெண்களுக்கு அனுமதியற்ற தொழில்கள்.
1974 இல் சோவியத் யூனியனில் உண்டாக்கப்பட்ட ஒரு சட்டமே இதன் வேராகும். நாட்டின் நீண்டகால நன்மைக்காகப் பெண்களின் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் தொழில்களில் அவர்களை ஈடுபடவிடாமல் தடுப்பது ஒரு சமூகத்தின் கடமை என்கிறது அச்சட்டத்தின் காரணம்.
ஆண்களுக்கு இணையாகத் தாமும் எல்லா வேலைகளிலும் அனுமதிக்கப்பட வேண்டுமென்று பெண்ணுரிமை இயக்கத்தினர் நீண்ட காலமாகவே ரஷ்யாவில் போராடி வருகிறார்கள். இந்தப் பட்டியலில் குறைந்துவரும் இலக்கங்கள் அவர்களின் வெற்றிப்படிகள் எனலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்