பிரபல ஊடக நிறுவனத்தின் பத்திரிகையாளரை வீட்டுக்கனுப்பியது போலந்தில் விழுந்த குண்டு!

கடந்த வாரம் உக்ரேனுக்கு அருகே போலந்தின் உள்ளே விழுந்து வெடித்த ஏவுகணைக் குண்டு சர்வதேச அளவில் சஞ்சலத்தை உண்டாக்கியது. அதன் அலைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக எதிரொலித்தன. அதை ரஷ்யாவின் குண்டு என்று முதலில் செய்தி வெளியிட்டது The Associated Press  செய்தி நிறுவனமாகும். அதுபற்றிய விபரங்களைச் சரியாக ஆராயாமல் அதை ரஷ்யக் குண்டு என்றும் அமெரிக்காவிலிருந்து அது உண்மையென்று குறிப்பிட்டதாகவும் செய்தியைப் பதிவுசெய்த பத்திரிகையாளர் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

AP வெளியிட்டதை உலக ஊடகங்கள் எட்டுத்திக்கிலும் பரப்பின. ஆனால் அடுத்த நாளே அதே நிறுவனம் தங்களுக்குக் கிடைத்த செய்தி தவறானதென்று குறிப்பிட்டிருந்தது. அந்தக் குண்டு ரஷ்யாவில் செய்யப்பட்டது ஆனால், உக்ரேன் தன்னைப் பாதுகாக்கச் சுட்ட குண்டுகளில் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்றும் பின்னர் தெரியவந்தது.

செய்திகள் வெளியாகும்போது அதன் மூலம் என்ன, உண்மையா, இல்லையேல் உண்மையான செய்தி என்ன, அதன் பின்னாலிருப்பவர்கள் யார் போன்றவைகளை ஆராயவேண்டியது செய்தி நிறுவனங்களின் தலையாய பொறுப்புகளில் ஒன்றாகும். தற்போது ஊடகங்களிடையே இருக்கும் போட்டியானது அவை வேகமாகச் செய்தியை வெளியிடவேண்டும் என்ற நோக்கில் ஆராயும் வழிமுறைகளில் தவறுகள் உண்டாகக் காரணமாகிறது என்று இதுபற்றி ஊடகவியல் ஆராய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *