சிறைப்பறவைகளைப் பரிமாறிக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது ரஷ்யா.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரிட்டனி கிரினருக்கு வியாழனன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உலகப் பிரசித்தி பெற்ற கிரினர் தனது பாவனைக்கான போதை மருந்தைக் கைப்பைக்குள் வைத்திருந்ததால் 9 வருடச்சிறைத்தணை பெற்றார். உடல் உபாதைகளுக்காகப் அமெரிக்காவில் பாவனைக்கு அனுமதிக்கப்படும் அந்தப் போதை மருந்து எண்ணெய் ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

கிரினரின் சிறைத்தண்டனை மிகக் கொடூரமானது என்று குறிப்பிட்ட ஜோ பைடன் அவரை உடனடியாக விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.  கிரினரைத் தவிர அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றிய போல் வீலன் என்பவரும் ரஷ்யாவில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். 2018 இல் உளவு பார்த்ததாக போல் வீலன் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கு 16 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

கிரினரையும், வீலனையும் விடுதலை செய்வதானால் அமெரிக்கச் சிறையில் 25 வருடச் சிறைத்தண்டனை பெற்று வாழும் விக்டர் பௌட் என்பவரை விடுவிக்கத் தயார் என்று அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தைகளெதிலும் ஈடுபடாததால் குறிப்பிட்ட சிறைப்பறவைகள் பரிமாற்றம் பற்றி உளவு அமைப்புகளின் மட்டத்திலேயே பேசப்பட்டிருந்தது. ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய விக்டர் பௌட் ஒரு ஆயுத விற்பனையாளராகும்.

வெள்ளியன்று ரஷ்யா வெளியிட்டிருக்கும் செய்தியொன்று அமெரிக்கா விரும்பியபடி சிறையிலிருப்பவர்களைப் பரிமாறிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *