சவூதி அரேபியா – கத்தார் இடையே கடல், ஆகாய மார்க்கங்கள் திறக்கப்படுகின்றன!
இன்று சவூதி அரேபியாவின் அல்உலா நகரில் நடக்கவிருக்கும் 41 வது வளைகுடா நாடுகளின் மாநாட்டை ஒட்டி இன்று மாலை முதல் சவூதி அரேபியா தனது கடல் மற்றும் விமான எல்லைகளை கத்தாருடன் திறந்துகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“எங்கள் பிராந்தியத்தில் எதிர்கொள்ளவேண்டிய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நாமெல்லோரும் ஒன்றிணைந்து பலமாகவேண்டும்,” என்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் குறிப்பிட்டிருக்கிறார்.
சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தாருடனான தமது தொடர்புகளை முறித்துக்கொண்ட பின்னர் நடக்கும் வளைகுடா நாடுகளின் மாநாட்டில் கத்தாரின் தலைவர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி பங்கெடுத்துக் கொள்வது இது முதல் தடவையாகும். இந்த மாநாட்டின் இறுதியில் கடந்த மூன்று வருடங்களாக இவர்களிடையே இருந்த பிரிவினையை முடித்துக்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் சார்பில் இம்மாநாட்டில் டிரம்ப்பின் மருமகன் ஜராட் குஷ்நர் கலந்து கொள்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்