அதிக விபரங்களை வெளிவிடாமல் பிரிந்தவர்கள் கூடிய அல்உளா மாநாடு.
சர்வதேச அரசியல் அரங்கில் எதிர்பார்ப்புக்களை உண்டாக்கிய வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தின் மாநாடு சவூதி அரேபிய இளவரசனின் தலைமையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்படுகிறது. மாநாட்டைக் கூட்டியவர் சவூதி அரேபிய மன்னராக இருப்பினும் இளவரசர் முஹம்மது பின் சல்மான் தனது தந்தையின் சார்பில் அதை நடாத்தினார்.
ஜனவரி ஐந்தாம் திகதி மாநாடு கூட முன்னரே அந்த நாள் மாலையில் சவூதி அரேபியாவுக்கும், கத்தாருக்குமிடையே 2017 நடுப்பகுதி முதல் மூடப்பட்டிருந்த வான், கடல் வழிகள் மீண்டும் திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநாட்டின் முடிவில் 2017 பிளவுக்கு முன்னர் இருந்தது போலவே மீண்டும் கத்தாருடன், சவூதி அரேபியா, பஹ்ரேன், எமிரேட்ஸ் ஆகிய வளைகுடா நாடுகள் தமது உறவை உண்டாக்கிக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாடுகளுக்குள்ளே பிளவுகள் ஏற்பட்டிருந்த காலத்தினூடே அப்பிளவுகளை ஒழித்து சமாதானத்தை உண்டாக்க நடு நிலையின் நின்ற காலஞ்சென்ற ஒமான் சுல்தான் கபூஸ், காலஞ்செஞ்ச குவெய்த் அரசன் அல் சபா ஆகியவர்களின் ஞாபகார்த்தமாக இந்த மாநாட்டுக்குப் பெயரிடப்பட்டிருந்தது. குவெய்த், ஒமான் தவிர அமெரிக்காவும் இவர்களிடையே நடுவராக இருந்தது. அமெரிக்காவின் சார்பில் டிரம்ப்பின் மருமகன் குஷ்னர் மாநாட்டில் பங்குபற்றினார். 2017 இன் பின்னர் முதல் தடவையாக கத்தாரின் அரசரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினார்.
மாநாட்டின் இறுதியில் வளைகுடா நாடுகளும் எகிப்தும் கையெழுத்திட்ட கூட்டுறவு ஒப்பந்தம், “அரபு மற்றும் வளைகுடா ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் வலியுறுத்துகிறது, மேலும் நம் நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் தொடர்ச்சியைக் காட்டுகிறது,” என்று சவூதி அரேபிய இளவரசன் பத்திரிகைச் சந்திப்பில் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளின் எதிரியான ஈரானின் இராணுவ ஆக்கிரமிப்புக்களை எதிர்நோக்கவும், பொருளாதார, சமூக மாற்றங்களை ஒன்றாக முகம்கொடுக்கவும் அரபு நாடுகள் ஒரே அணியில் நின்று போராடவேண்டும் என்பது மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் முக்கியமாக ஒன்றிணைத்திருக்கிறது. அத்துடன், வரவிருக்கும் ஜோ பைடன் அரசு கடந்துபோகும் டிரம்ப்பின் அரசு போல அரபு நாடுகளுடன் நெருக்கமாக உறவாடாது என்பதாலும் இந்த நாடுகள் ஒன்றிணைய விரும்புவதையும் கவனிக்க முடிந்தது.
மாநாட்டில் வெளியிடப்பட்ட ஒப்பந்த விபரங்களைத் தானும் வரவேற்பதாகக் கத்தார் அறிவித்திருக்கிறது. சவூதி அரேபியா, பஹ்ரேன், எமிரேட்ஸ் நாடுகளால் கத்தார் மீது ஒற்றுமைக்கு அவசியமாகப் போடப்பட்ட 13 கட்டுப்பாடுகள் பற்றி மாநாட்டிலோ அதன் பின்னரோ எவரும் எதையும் குறிப்பிடவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்