இணையத்தளக் கட்டுப்படுத்தலால் பெரும் நஷ்டமடைந்த உலக நாடுகளின் முதலிடத்தில் இந்தியா.
2020 இல் தமது நாடுகளில் இணையத்தளங்களை அவ்வப்போது மூடி, கட்டுப்படுத்திய 21 நாடுகள் மொத்தமாகச் சுமார் 4 பில்லியன் டொலர்களை இழந்திருப்பதாகக் பிரிட்டனிலிருந்து இணையத்தளப் பாதுகாப்பு பற்றி ஆராயும் அமைப்பொன்று குறிப்பிடுகிறது.
21 நாடுகளும் மொத்தமாக நஷ்டமடைந்த தொகையில் நாலில் மூன்று பங்கை இந்தியா தனது நாட்டில் ஏற்படுத்திய இணையத்தளக் கட்டுப்பாடுகளால் இழந்தது.
இந்தியாவால் 2019 லேயே கொண்டுவரப்பட்ட இணையத்தளக் கட்டுப்பாடுகள் 2020 லும் தொடர்ந்ததாகவும் அதனால் இந்தியாவின் நஷ்டம் 2019 விட 2020 இல் இரண்டு மடங்காகும். 2020 இல் இந்தியா சுமார் 8,000 மணித்தியாலங்கள் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. முக்கியமாக இந்தியா தனது காஷ்மீர் பிராந்தியத்தில் ஏற்படுத்திய கட்டுப்பாடுகள் அப்பிரதேசத்தின் சகல துறைகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தி நஷ்டங்களை ஈட்டியது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இணையத்தளக் கட்டுப்பாடுகளால் நஷ்டங்களை ஈட்டிய இரண்டாவது நாடாக பெலாருஸ் குறிப்பிடப்படுகிறது. அங்கே ஜனாதிபதியை எதிர்த்தும், தேர்தல் முடிவுகளை எதிர்த்தும் எழுந்த போராட்டங்களைத் தவிர்க்க பெலாருஸ் சுமார் 218 மணித்தியாலங்கள் இணையத்தளத்தைக் கட்டுப்படுத்தியதால் ஏற்பட்ட நஷ்டம் சுமார் 336.4 மில்லியன் டொலர்களாகும்.
அடுத்ததாக மியான்மார் ரோஹின்யா இனமக்கள் வாழும் ராக்கின்யே மாநிலத்தில் சுமார் 5,160 மணித்தியாலங்கள் இணையத்தளத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. அதையடுத்து யேமன் 912 மணித்தியாலங்கள் இணையத்தளக் கட்டுப்பாடுகளை உண்டாக்கியிருக்கிறது.
உலக நாடுகள் முழுவதிலும் சுமார் 28,000 மணிகள் இணையத்தளக் கட்டுப்பாடுகள் 2020 இல் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இது 2019 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 49% அதிகமானது சுமார் 268 மில்லியன் மக்களின் தினசரி வாழ்க்கையைப் பாதித்திருக்கிறது. இவைகளில் 42 விகிதமான இணையத்தளக்கட்டுப்பாட்டு நேரம் நாட்டு மக்களின் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் கட்டுப்படுத்தவே நிறைவேற்றப்பட்டன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்