வாஷிங்டனில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள்.
ஏற்கனவே அறிவித்தபடி “தேர்தல் வெற்றியைக் களவெடுத்துவிட்டார்கள்,” என்ற பெயரில் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த பேரணியில் அவர் பேசினார். “நாங்கள் கடைசி வரையில் தோல்வியை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. களவு நடந்திருப்பதால் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை,” என்று குறிப்பிட்டு தனது ஆதரவாளர்களை “உங்கள் குரலைக் கேட்கச் செய்யுங்கள், கடைசி வரை போராடுங்கள்,” என்று தூண்டிவிட்டு வெள்ளை மாளிகைக்குச் சென்றுவிட்டார்.
டிரம்ப் அங்கிருந்து அகன்றபின்னரும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் அங்கேயே கோஷம் போட்டபடி நின்றிருந்தார்கள். அவர்களின் குரல் பலமாகி, நடவடிக்கைகள் மோசமாகின. பாதுகாப்பு எல்லைகளை உடைத்துக்கொண்டு, அங்கிருந்த பொலீசாரைத் தாக்கினார்கள். மதில்கள் மீதும் பக்கத்திலிருந்த கட்டடங்களின் ஏறி அருகேயிருந்த பாராளுமன்றக் கட்டடத்துக்குள் பாதுகாப்பு எல்லைகளை மீறிக்கொண்டு நுழைந்து அங்கே கலவரம் செய்தார்கள். அக்கட்டடம் மக்களுக்காகத் திறந்திருக்கும் கட்டடமாக இருப்பினும் கலவரக்காரர்களின் நடத்தையால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்தும் டிரம்ப் ஆதரவாளர்கள் அடங்க மறுக்கவே பொலீசார் ஆயுதபாணிகளாக புகைக்குண்டுகளையும், கண்ணிர்ப் பீரங்கிகளையும் பாவித்துக் கூட்டத்தை அகற்ற முயன்றார்கள். ஒரு பெண் தாக்கப்பட்டுக் காயப்பட்டிருக்கிறார்.
அதே சமயத்தில் பாராளுமன்றத்தின் இன்னொரு பக்கத்தில் செனட் சபை கூடி சம்பிரதாயபூர்வமாக ஜோ பைடனை அரசை ஏற்க வருமாறு உப ஜனாதிபதி மைக் பென்ஸ் அழைக்கும் நிகழ்வு ஆரம்பித்திருந்தது. ஆனால், எல்லாமே நிறுத்தப்பட்டு அரசியல் தலைவர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டார்கள். பாராளுமன்றக் கட்டடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுக் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன.
ஜோ பைடன் பகிரங்கமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி டிரம்ப் தனது ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தி அமைதியாக்கவேண்டுமென்று கோரினார். “இது ஒரு களவெடுக்கப்பட்ட தேர்தல் வெற்றி,” என்று மீண்டும் குறிப்பிட்ட டிரம்ப் தனது ஆதரவாளர்களை அமைதியாக நடந்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும்படி டுவீட்டியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்