செனட் சபையைக் கைப்பற்றியாயிற்று, ஜோ பைடனின் வெற்றியும் உறுதியாயிற்று, சம்பிரதாய ரீதியாக.
ஜனவரி ஐந்தாம் திகதி ஜோர்ஜியா மாநிலத்தில் நடந்த இரண்டு செனட் சபை அங்கத்தவர்களுக்கான தேர்தலில் இரண்டு இடங்களையும் டெமொடிரடிக் கட்சியின் வேட்பாளர்களே கைப்பற்றியதை மாநிலத்தின் தேர்தல் திணைக்களம் உறுதிசெய்திருக்கிறது.
ஜான் ஒஸ்ஸொவ், 33 வயதானவர் ஒரு இடத்தையும் ரபாயேல் வார்னொக் மற்ற இடத்தையும் ரிபப்ளிகன் கட்சியிடமிருந்து பறித்திருக்கிறார்கள். முதல் தடவையாக ஜோர்ஜிய மாநிலத்தில் வெற்றிபெற்ற கறுப்பினத்தவரான வார்னொக் தனது தாயார் அங்கே ஒரு பருத்திப்பண்ணை அடிமையாக இருந்ததுபற்றி உணர்ச்சிவசத்துடன் சுட்டிக்காட்டினார். அவர் மார்ட்டின் லூதர் கிங்ஙின் தேவாலயத்திலிருந்து வந்த ஒரு கிறீஸ்தவப் போதகராகும். 33 வயது யூதரான ஜான் ஒஸ்ஸொவ் செனட் சபையின் அதி இளையவராகும்.
இவ்விருவருடைய வெற்றியின் பின்னர் ஜோ பைடனின் கட்சியினர் அமெரிக்காவின் இரண்டு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறார்கள். செனட் சபையில் ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, வாக்கெடுப்புக்கள் சரிசமனான இருக்கும் பட்சத்தில் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வெற்றியத் தீர்மானிக்கும் வாக்கை இடுவார்.
வெற்றிபெற்ற இரண்டு செனட் அங்கத்தவர்களுமே நாட்டில் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பிளவு பற்றிய விழிப்புணர்வுடன் “நாங்கள் டெமொகிரடிக் கட்சி சார்பில் வென்றாலும், சகல மக்களின் அங்கத்தவர்களாகச் செயற்படுவோம்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
வாஷிங்டனில் புதனன்று ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னர் மீண்டும் செனட் அங்கத்துவர்களுக்கான கூட்டம் தொடர்ந்தது. சம்பிரதாயப்படி நாட்டின் உப ஜனாதிபதியான மைக் பென்ஸ் ஏற்கனவே நாட்டின் எலெக்டர்களால் பிரேரிக்கப்பட்ட புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனைப் பதவியேற்க அழைத்தார். சில ரிபப்ளிகன் கட்சி அங்கத்தவர்கள் மட்டுமே அதை எதிர்த்தார்கள். பெரும்பான்மையானவர்களுடைய ஆதரவுடன் ஜோ பைடன் நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்று தீர்மானிக்கப்பட்டது. அவரது பதவியேற்ற நாள் ஜனவரி 20 ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்