ஜனநாயக மாற்றங்கள் கோரும் ஹொங்கொங்வாசிகள் பெருமளவில் கைது செய்யப்பட்டார்கள்.
கடந்த ஜூன் மாதத்தில் தனது நாட்டின் ஒரு பாகமான ஹொங்கொங்கில் சீனா கொண்டுவந்த புதிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாவித்து நாட்டின் சுதந்திர ஊடகங்களை அடைத்து, அதன் தலைவர்களையும் ஜனநாயகக் குரல் கொடுத்த தலைவர்களையும் கைது செய்துவிட்ட சீனா தொடர்ந்தும் ஆங்காங்கே போராட்டங்கள் செய்பவர்களைக் கைது செய்கிறது.
புதனன்று காலை ஹொங்கொங்கில் சுமார் 1,000 பொலீசார் பங்குபற்றிய தேடல்களில் நாடு முழுவதும் சுமார் 50 பேருக்கும் அதிகமானோர் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரே நாளில் இத்தனை ஜனநாயக விரும்பிகள் கைதுசெய்யப்படுவது இந்த நாளிலாகும்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை ஹொங்கொங் அரசு வெளியிடாவிட்டாலும் அவர்களின் விபரங்களைச் சமூகவலைத்தளங்களின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. 2020 இல் நடக்கவிருந்து கொரோனாக்கட்டுப்பாடுகளால் தள்ளிப்போடப்பட்ட பொதுத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளுக்காக உழைத்தவர்களே இப்படித் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். நாட்டில் ஆளும் சீன ஆதரவுக் கட்சிக்கு எதிரான கோட்பாடுள்ளவர்களைச் சீன அரசு “அரசாங்கத்தை விழுத்தி, நாட்டில் குழப்பம் விளைவிப்பவர்கள்” என்று குறிப்பிட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் சீனா ஹொங்கொங்கில் படிப்படியாகத் தனது பிடியை இறுக்கி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலமாக அதை எதிர்த்துக் குரல் கொடுத்தும் அதைச் சீனா பொருட்படுத்தவில்லை.
ஹொங்கொங்கின் கடைசி ஆளுனராக இருந்த கிரிஸ் பட்டன், பிரிட்டனின் வெளிநாட்டு அமைச்சர் டொமினிக் ராப் மற்றும் ஜோ பைடனின் வரவிருக்கும் வெளிநாட்டமைச்சர் அண்டனி பிளிக்கன் ஆகியோர் சீனாவின் நடவடிக்கையைக் கண்டித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்