பாரிஸ் பாடசாலை மாணவ வழிகாட்டுனருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று!
பாரிஸ் நகருக்குத் தெற்கே பான்யூ (Bagneux) பகுதியில் பாடசாலைகளில் பணிபுரியும் மாணவ வழிகாட்டுநரான (animatrice) பெண் ஒருவருக்கு புதிய இங்கிலாந்து வைரஸ் (variant britannique) தொற்றியுள்ளது.
இதனால் புதிய மரபு மாறிய வைரஸ் கொத்தணியாகப் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகம் (la Direction générale de la Santé) இதனை அறிவித்துள்ளது. புதிய வைரஸ் தொற்றாளர்கள் இருவர் பாரிஸ் பிராந்தியத்திலும்( Ile-de-France) நாட்டின் வடமேற்குப் பிராந்தியமாகிய பிரித்தான் (Bretagne) பகுதியிலும் அண்மையில் கண்டறியப்பட்டிருந்தனர்.
இங்கிலாந்துடன் நேரடியாகவோ அல்லது அங்கிருந்து வந்த வேறு எவருடனுமோ தொடர்புகள் எதனையும் கொண்டிருக்காத அந்த இருவருக்கும் ‘இங்கிலீஷ்’ வைரஸ் தொற்றியது எப்படி என்பது மருத்துவ வட்டாரங்களில் கவலைகளையும் அச்சத்தையும் உருவாக்கி உள்ளது.
இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் முதல் தொற்றாளர் Bagneux (Hauts-de-Seine) என்ற இடத்தில் கண்டறியப்பட்டிருக் கிறார். இவர் அங்குள்ள இரண்டு பாடசாலைகளில் அனிமேற்றராக பணிபுரிகிறார். இவர் மூலமாகப் புதிய வைரஸ் பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்குப் பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் வைரஸ் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கடந்த விடுமுறை காலப்பகுதியில் தொற்றுக்குள்ளான இப் பெண் இங்கிலாந்துடன் தொடர்பு எதனையும் கொண்டிராதவர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரித்தான் (Bretagne) தொற்றாளர் அந்தப்பகுதியில் இயங்கும் நீண்டகால மருத்துவப் பராமரிப்பு நிலையம் (une unité de soins de longue durée) ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட எட்டுப் பேருக்கு புதிய வைரஸ் தொற்றி யிருப்பது பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.இவ்விரு இடங்களும் பெரும் வைரஸ் கொத்தணியாக மாறலாம் என்று அஞ்சப்படுகிறது. பிரிட்டனிலும் தென்னாபிரிக்காவிலும் மரபு மாற்றமடைந்து பரவிவருகின்ற புதிய வைரஸ் பிரான்ஸில் இதுவரை 22 தனிநபர்களுக்குத் தொற்றி உள்ளது.
உயிராபத்து குறைந்த ஆனால் தீவிரமாகத் தொற்றுகின்ற இந்த வைரஸ் காரணமாகப் பிரித்தானியா முடக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச ரீதியாக அச்சத்தையும் கவலைகளையும் எழுப்பி இருக்கும் புதிய வைரஸ் குறித்து விழிப்புடன் தகவல் திரட்டுமாறு நாடு முழுவதும் உள்ள ஆய்வு கூடங்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
(அடைப்புக் குறியிடப்பட்டவை பிரெஞ்சு சொற்கள்)
குமாரதாஸன். பாரிஸ்.