தங்குமிடமின்றி வாழ்ந்த அகதிகளுக்கு பொஸ்னியா கூடாரங்களை ஒழுங்கு செய்ய ஆரம்பித்திருக்கிறது.
பொஸ்னியா ஹெர்ஸகொவினாவில் லீபா நகரில் தற்காலிகமாக உண்டாக்கப்பட்ட அகதிகள் முகாமில் தங்கியிருந்து அதன் மோசமான நிலையால் டிசம்பரில் வெளியேற்றப்பட்டுச் சுமார் 1,000 அகதிகள் இடிபாடுகளிலும், வீதிகளிலும் வாழ்ந்து வந்தார்கள். ஆசியா, ஆபிரிக்கா பிராந்தியங்களைச் சேர்ந்த அவர்களுக்கான தங்குமிடங்களை பொஸ்னிய அரசு ஒழுங்கு செய்திருக்கிறது.
ஐரோப்பாவின் மற்றைய பாகங்களுக்குப் போவதற்குத் திட்டமிட்டு வந்து, எல்லைகள் மூடப்பட்டதால் அப்பிராந்தியத்தில் மாட்டிக்கொண்ட அந்த அகதிகளுக்கு உறைவிடமில்லாததால் குளிர்காலத்தில், உறைபனிக்கிடையேயும் அனாதரவாக வாழவேண்டியிருந்தது. அவர்களுக்குக்கு பக்கத்து நகரிலேயே கூடாரங்கள் ஒழுங்குசெய்து தருவதாக உறுதியளித்து அவ்விடம்வரை பேருந்துகளில் இட்டுச் சென்று அந்த ஊர் மக்கள் அகதிகள் அங்கே குடியேறுவதைச் சம்மதிக்காததால் அவர்களைக் உறைபனிவிழும் குளிருக்குள் திரும்பிப் பழைய இடத்துக்கே நடந்துபோகவைத்தார்கள். இதுபற்றிச் சர்வதேச ரீதியில் பொஸ்னிய அரசு மீது கடும் விமர்சனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதையடுத்து பொஸ்னியாவின் இராணுவத்தின் மூலம் வேறு கூடாரங்கள் அகதிகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இக்கூடாரங்கள் கட்டுமானப்பணி முடிவடைய முன்னரே குளிர்காலநிலை மோசமாகிவிட்டது. எனினும் ஒரு பகுதியினரை அக்கூடாரங்களுக்குள் குடியேறவைத்திருக்கிறார்கள் பொஸ்னிய அதிகாரிகள். அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களும் குளிர்காலத்துக்கு வசதியாக வெம்மையூட்டப்பட்ட அல்ல. தேவையான இடவசதி தொடர்ந்தும் இல்லாததால் தொடர்ந்தும் பலர் நைலோன் கூடாரங்களைப் பாதுகாப்பாக்கி வாழ்கிறார்கள் என்று ஐ.நா-வின் அகதிகள் காரியால அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்