யாழ். தூபி தகர்ப்பைக் கண்டிகின்றார் ஐரோப்பிய ஒன்றிய டெனிஸ் பிரதிநிதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழர்களது போர் நினைவிடம் தகர்க்கப்பட்டிருப்பதை டென்மார்க் அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டித்து இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் தர வேண்டும்.-இவ்வாறு கோரியிருக்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான டென்மார்க் நாட்டின் உறுப்பினர் நிக்கோலாய் விலாம்சென் (nikolaj villumsen).

https://vetrinadai.com/news/mullivaikkaal-memorial-jaffna/

யாழ்ப்பாணச் சம்பவம் தொடர்பாகத் தனது சமூக வலைத் தளங்களில் வெளியிட்டிருக்கின்ற பதிவுகளிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.டெனிஸ் மொழியில் வெளியிட்டிருக்கும் தனது பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது :”டென்மார்க்கில் பெரும்பாலானவர் களுக்கு இந்தப் பயங்கரமான வரலாறு தெரியாது. “இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் தொடர்புபட்ட வகையில் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினால் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர். போரின் முடிவில் சிவிலியன்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை அரசு அதனை மறுத்து வருகிறது.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அரச படைகள் நேற்றிரவுதகர்த்துள்ளன. டென்மார்க்கும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த அழிப்பு நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும்.இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.”-இவ்வாறு நிக்கோலாய் விலாம்சென் தெரிவித்திருக்கிறார்.

டென்மார்க் அரசியல் பிரமுகரான விலாம்சென் அந்நாட்டின் Red–Green Alliance எனப்படுகின்ற சூழலியல் சோசலிசக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர். ஐரோப்பிய நாடாளுமன்றத் துக்கான பிரதிநிதியாக 2019 ஆம் ஆண்டில் தெரிவானவர்.

(படங்கள் : nikolaj villumsen Facebook)

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *