அணு ஆயுதங்களை இயக்கும்ரகசியங்கள் ட்ரம்ப் வசம்!அது குறித்தும் அச்சம்!!

பொதுவாக நாட்டின் அதிபர்கள் சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்கும் சமயத்தில் ரகசியக்காப்பு பிரமாணம் என்ற ஒன்றும் இடம்பெறுவதுண்டு. மிக முக்கிய பாதுகாப்பு ரகசியங்கள், பேரழிவு அணுவாயுதங்களை இயக்குவதற்கு அனுமதிக்கும் ரகசிய குறியீடுகள் (nuclear codes) போன்றவற்றின் பரிமாறுதல்கள் இந்த ரகசியக் காப்புப் பிரமாணத்துள் அடங்கும்.

இரண்டாம் உலகப் போரின் போது அன்றைய அமெரிக்க அதிபர் ஹரி ட்றூமன் (Harry Trueman) ஜப்பானின் ஹீரோஷீமா, நாகஷாகி நகரங்கள் மீது உலகின் முதலாவது அணுகுண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். அதன் பின்னர் அணு ஆயுதத் தாக்குதல் களுக்கான பணிப்புகளை வழங்கும் ரகசியப் பொறிமுறைகள் வெள்ளை மாளிகைக்குள்ளேயே பேணப்பட்டு வருகின்றன.

அணுவாயுதத் தாக்குதல் ஒன்றுக்கான உத்தரவை வழங்கும் பொத்தான்கள் (button) அடங்கிய “அணுப் பந்துகள்” (nuclear football) என்னும் இலத்திரனியல் கருவிகள் வெள்ளை மாளிகையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கறுப்பு சூட்கேஸ்களில் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவிகளையும் அவை தொடர்பான ரகசிய ஆவணங்களையும் அணுகும் அதிகாரம் இன்னமும் அதிபர் ட்ரம்பிடம்தான் இருக்கிறது.அதிபரின் முக்கிய இடமாற்றங்களின் போது இந்தக் கறுப்பு சூட்கேஸ்களும் அவரோடு இடத்துக்கிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன.தாக்குதல் உத்தரவு தன்னால்தான் வழங்கப்படுகிறது என்பதைக் கட்டளைப்பீடங்களுக்கு உறுதிப்படுத்தும் ரகசியக் குறியீடுகள் அதிபருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் வகையில் மிக ரகசியமாகப் பேணப்படுகின்றன.

அணு ஆயுதத் தாக்குதல் உத்தரவு ஒன்றை நிரந்தரக் கட்டளைப்பீடங் களுக்கு அனுப்புவதற்கு முன்னர் அது குறித்து அதிபர் முதலில் கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதிக்கு (Chairman of the Joint Chiefs of Staff)தெரிவிக்க வேண்டும் என்று இராணுவ ஆவணங்கள் கூறுகின்றன.

அண்மைய நாட்களில் ட்ரம்பின் நடவடிக்கைகள் குறித்துக் கவலை கொள்வோர் அணு ஆயுதக் குறியீடுகள் (nuclear codes) தொடர்பான அச்சத்தையும் எழுப்புகின்றனர்.நிதானம் தவறி நடக்கின்ற அதிபர் வேண்டும் என்றே ஒரு போரைத் தொடக்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கக் கூடும் என்ற சந்தேகம் அமெரிக்கப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆலோசகர்களிடம் காணப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப் குறித்தும் அணு ஆயுதங்களை இயக்கும் ரகசிய குறியீடுகள் பற்றியும் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியுடன் (Chairman of the Joint Chiefs of Staff) ஆலோசனை நடத்தியிருப்பதாக சபாநாயகர் நான்ஸி பெலோசி (Nancy Pelosi) அம்மையாரும் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தங்கியுள்ள தனது கடைசி நாட்களில் அவர் அணுவாயுத ரகசியங்களை அணுகுவதைத் தடுக்குமாறு பென்டகன் அதிகாரிகளிடம் அவர் கேட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் வரலாற்றில் அதிபர் ஒருவர் நாட்டின் தேசியப் பாதுகாப்புத் தொடர்பான இத்தகைய ஐயங்களுக்கு உள்ளாகுவது இதுவே முதல் முறை ஆகும்.இதேவேளை – காங்கிரஸ் கட்டடத்தில் நடந்த சம்பவங்களை அடுத்து அதிபர் ட்ரம்பை சுற்றி உருவாகிய அழுத்தங்கள் மேலும் இறுகி வருகின்றன. முகநூல், ருவீற்றர் போன்றன ட்ரம்ப்பின் கணக்குகளை முடக்கியதால் அவர் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்.

ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் புதிய அதிபரது பதவியேற்பு நிகழ்வில் பதவி விலகும் அதிபர் கலந்துகொள்ளும் பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. 1869 ஆம் ஆண்டு அன்றைய அதிபர் அன்றூ ஜோன்சனுக்குப் (Andrew Johnson) பிறகு பதவியேற்பு நிகழ்வைப் புறக்கணிக்கின்ற முதலாவது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆவார்.

பைடன் பதவியேற்பதற்கு முன்னராக மிக வேகமான குற்றவிசாரணைச் சட்ட நடவடிக்கை ஒன்றின் மூலம் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் இருந்து தூக்குவதற்கான தீவிர ஆலோசனைகள் தொடர்ந்து இன்னமும் நடைபெற்று வருகின்றன.

(படம் :அணுவாயுதங்களை இயக்கும் ரகசியங்கள் அடங்கிய கறுப்பு சூட்கேஸ்கள் விமானத்தில் ஏற்றுவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட ஒரு காட்சி-மார்ச் 2018)

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *