மார்செய் நகரில் எட்டுப் பேருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று!
பிரான்ஸில் ஆங்காங்கே ‘இங்கிலாந்து வைரஸ்’ தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டுவருகின்ற நிலையில், நாட்டின் தெற்குத் துறைமுக நகரான மார்செயில் (Marseille) எட்டுப்பேருக்கு அந்த வைரஸ் தொற்றி உள்ளது.
பிரிட்டனில் இருந்து விடுமுறைக்கு வந்து அங்கு தங்கியிருந்த ஒருவர் மூலம் அவருடன் தொடர்புடைய சிலருக்குப் பரவி பின்னர் அது ஒரு குடும்பக் கொத்தணியாக மாறிப் பலருக்கும் தொற்றி உள்ளது. சந்தேகத்துக்குரிய 23 பேர் சோதனை செய்யப்பட்டதில் அவர்களில் எட்டுப் பேருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு பெரும் எடுப்பிலான வைரஸ் சோதனை முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொற்றாளர்களைக் கண்டுபிடிப்பதற் காகவும் சூழலில் வைரஸ் கிருமித் தடயங்களை பரிசோதிக்கவும் கடற்படை தீயணைப்பு பிரிவினர் (marins-pompiers) சேவைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக மார்செய் நகர முதல்வர் அறிவித் திருக்கிறார்.
மார்செயில் தளம் கொண்டுள்ள கடற்படையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவின் (marins-pompiers) வீரர்கள் நகரின் கழிவு நீர் மற்றும் தொற்றாளர்கள் வசிக்கும் பகுதிகளில் தரைகள் மற்றும் இடங்களில் புதிய வைரஸின் தடயங்களைக் கண்டுபிடிக்கும் சோதனைகளில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை- இல் – து-பிரான்ஸ் பிராந்தியத்தில் முதலாவது இங்கிலாந்து தொற்றாளர் அறியப்பட்ட Bagneux (Hauts-de-Seine) பகுதியில் சனி, ஞாயிறு இரு தினங்களும் பரவலாகப் பெரும் வைரஸ் பரிசோதனைகள் நடத்தப்பட்டி ருக்கின்றன. அவற்றின் பெறுபேறுகள் சில தினங்களில் தெரியவரும் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பெரும்பாலும் உயிராபத்தை ஏற்படுத்தாத தன்மை கொண்ட இங்கிலாந்து வைரஸ், அதிவேகமாகத் தொற்றும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கப்படுகிறது.
(படம் :மார்செயில் செயற்படும் கடற்படை தீயணைப்பு (marins-pompiers) பிரிவினர்)
குமாரதாஸன். பாரிஸ்.