இரண்டாம் உலக யுத்தக் கொடுமைகளிலிருந்து தப்பியவர்களில் 900 யூதர்களின் உயிரைக் கொவிட் 19 குடித்தது.

ஜனவரி 27 ம் திகதியன்று “ஹொலகோஸ்ட்” என்றழைக்கப்படும் யூத இன அழிப்பில் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட சுமார் ஆறு மில்லியன் பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வருடம் அத்தினம் வழக்கத்தைவிட அதிகமாக இஸ்ராயேலில் ஞாபகப்படுத்தப்பட்டது. காரணம் இஸ்ராயேலில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் 900 பேர் யூத இன அழிப்பிலிருந்து தப்பியவர்களாகும். 

கொவிட் 19 ஆல் இறப்பவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களாக இருப்பதால் யூத இன அழிப்பில் தப்பித் தற்போது உயிரோடிருக்கும் 400,000 பேருமே இவ்வியாதிக்குப் பலியாகும் ஆபத்திலுள்ளவர்களே. இப்பெருவியாதியால் இஸ்ராயேலில் இறந்தவர்கள் தொகை 4,500 ஆகும். 

கடந்த வருடம் மார்ச் 20 ம் திகதி கொவிட் 19 தனது முதலாவது பலியை எடுத்தபோது அதற்காளானவர் யூத இன அழிப்பிலிருந்து தப்பிய ஆரியெ ஏவன் ஆகும். தனது 88 வது வயதில் இறந்த அவர் ஹங்கேரியில் பிறந்தவர். தனது தாயுடனும், சகோதரங்களுடனும் வீடொன்றின் கீழ்மட்டத்தில் வாழ்ந்தவர். அவரது தந்தை நாஸிகளின் யூத அழிப்பு முகாமொன்றில் கொல்லப்பட்டார். போரின் பின்னர் இஸ்ராயேலுக்கு அவர் புலம்பெயர்ந்தார்.

கொவிட் 19 காலத் தனிமைப்படுத்தல் யூத அழிப்பிலிருந்து தப்பியவர்களில் ஒரு சாராரை மனோரீதியாகவும் கடுமையாகத் தாக்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. நாஸிக் கொலைகாரர்களுக்குப் பயந்து எங்காவது ஒரு இருட்டறையில் ஒரு சில முகங்களையே பார்த்துக்கொண்டு, மற்றவர்களைத் தவிர்த்துப் பயந்தபடியே வாழ்ந்த நினைவுகள் மீண்டும் ஞாபகத்துக்கு வந்து பலர் வாடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.  

நாஸிகளின் கொலைகளுக்குத் தப்பிய யூதர்களில் சுமார் 180,000 பேர் இன்னும் இஸ்ராயேலில் வாழ்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *