அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நிதி கொடுக்கமாட்டோமென்கின்றன.
உலகின் பெரும்பான்மையான நாடுகள் போலவே அமெரிக்காவிலும் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான செலவுகளைத் தனியாரும், நிறுவனங்களுமே கொடுக்கின்றன. சில நிறுவனங்கள் இரண்டு கட்சிக்கும் கொடுக்க வேறு சில தங்களுடைய கோட்பாட்டுக்கு ஒவ்வான கட்சிக்கு நிறையவாகவே தேர்தல் நிதியை வழங்கிவருகின்றன.
2020 நவம்பரில் நடந்த தேர்தலுக்குப் பின்னர் அதன் முடிவுகளை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்தும் ஏற்க மறுத்து வருவதும், தனது ஆதரவாளர்களை உசுப்பேற்றி பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்ததும் அறிந்ததே. ஜனநாயகத்தைப் பேணுவதாயின் தேர்தலில் பங்குபற்றுகிறவர்கள் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு அமைதியான முறையில் பதவி மாற்றத்துக்கு வழிசெய்வதே அரசியல் நாகரீகம் என்பதைப் பல அமெரிக்க நிறுவனங்களும் சமீப வாரங்களில் பெருங்குரலில் சொல்லி வருகிறன.
பாராளுமன்றக் கட்டடத்துக்குள் உண்டாகிய நடப்புக்கள் சர்வதேச ரீதியில் அமெரிக்காவின் அரசியல் நாகரீகத்தை உலக நாடுகளில் ஏளனம் செய்ய வைத்துவிட்டதால் வெவ்வேறு நிறுவனங்கள் தேர்தல் முடிவுகளை ஏற்கமறுத்த டிரம்ப்பின் ஆதரவாள அரசியல்வாதிகளைக் கண்டிக்கின்றன, வேறு சில வெவ்வேறு வழிகளில் அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைக்கின்றன.
அதில் ஒரு வழிதான் டிரம்ப்பின் தேர்தல் முடிவை ஏற்காத அழிச்சாட்டியத்துக்குத் துணை நின்ற அரசியல்வாதிகளுக்கு எதிர்காலத்தில் நிதி கொடுக்க மறுக்கும் முடிவாகும். “மரியொட்” (Marriott International Inc) என்ற உலகின் மிக அதிகமான தங்கும் விடுதி நிறுவன உரிமையாளர்களும், “புளூ க்ரொஸ் புளூ ஷீல்ட் அஸோஸியேஷன்” (BCBSA) என்ற மூன்றிலொரு அமெரிக்கர்களின் ஆரோக்கியக் காப்புறுதிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களின் ஒன்றியம் ஆகியவை பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளக் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மறுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனிமேல் நிதி கொடுக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கின்றன. சர்வதேச சிட்டிகுரூப் வங்கிகளின் நிறுவனமும் அதே அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்