பெல்ஜியத்தில் பொதுமுடக்கச் சட்டங்களை மீறுகிறவர்களுக்குச் சிறையும், தண்டமும்.
சுமார் 20,000 க்கும் அதிகமானவர்கள் கொவிட் 19 ஆல் இறந்து தொற்றுதல் மிகவும் மோசமாக இருப்பினும் கூட பெல்ஜியத்தில் சட்டத்தை மீறித் தனியார் கூடிக் களியாட்டங்கள் நடத்துகிறார்கள். அவர்கள் மீது கடும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
கடந்த வாரம் அண்ட்வெர்ப்பனில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறிய 11 இளவயதினருக்கு எட்டு நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரை சிறையும், 4,000 எவ்ரோ வரையிலான தண்டங்களும் விதிக்கப்பட்டன. பெல்ஜியத்தில் ஒரு சில மாதச் சிறை விதிக்கப்பட்டவர்கள் அதை அனுபவிக்கவேண்டியது அவசியமில்லை என்றாலும் கூட அப்படியான தண்டனைகள் மூலம் நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்த்த விரும்புகிறது அரசு.
உலக நாடுகளிலேயே மக்கள் தொகையின் அளவுக்கும் பரவல், இறப்பு ஆகியவைகளுடன் ஒப்பிட்டால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நாடு பெல்ஜியம். முதலாவது அலையில் மட்டுமன்றி இரண்டாவது அலை பரவிக்கொண்டிருக்கும்போதும், மிகக் கடும் கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவந்திருந்தாலும் நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
சுமார் 11.5 மில்லியன் குடிமக்களைக் கொண்ட பெல்ஜியத்தில் ஏழு நாட்களுக்குள் தேசிய அளவில் கொரோனாத் தொற்றுக்கள் 14 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. தலைநகரான பிரஸல்ஸில் ஒரே வாரத்தில் நோய்ப்பரவல் 75 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்