விசாரணைக்காகத் தன்னை நீதிமன்றத்தில் நிறுத்த முயல்வது சிரிப்புக்குரியது, என்கிறார் டிரம்ப்
“டிரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து அவரது அமைச்சரவையே நீக்கவேண்டும் இல்லையேல் கலவரத்தைத் தூண்டிவிட்டதற்காக அவரை உச்ச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்,” என்று திங்களன்று முடிவு செய்திருந்தார்கள் டெமொகிரடிக் கட்சியினர். அதைச் செய்ய உப ஜனாதிபதிக்கு 24 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
செவ்வாயன்று முடியும் அந்த நேரக்கெடுவுக்குள் ரிபப்ளிகன் கட்சியினர் அதைச் செய்யாவிடின் “உச்ச நீதிமன்ற விசாரணை” பற்றிய கோரிக்கையை புதனன்று பாராளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றவிருக்கிறார்கள் டெமொகிரடிக் கட்சியினர். அவர்களது கட்சியினர் பெரும்பான்மையில் அது நிறைவேறும் என்றே குறிப்பிடப்படுகிறது.
“ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க மக்களிடம் பெற்ற நம்பிக்கையைப் பேணாமல் நாட்டு மக்களுக்குப் பெரும் சேதம் விளைவித்திருக்கிறார்,” என்கிறது அவருக்கெதிரான குற்றச்சாட்டு. அந்த விசாரணை நடக்குமானால் அமெரிக்கச் சரித்திரத்தில் இரண்டு தடவை உச்ச நீதிமன்ற விசாரணைக்குள்ளான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெறுவார்.
வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டு டெக்சாஸுக்குப் போகமுன்பு டிரம்ப் தன் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றச்சாட்டைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தார். “அவை சிரிப்புக்குரியவை,” என்று குறிப்பிட்ட அவர் தான் வன்முறையை ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டார். மேடையில் தான் தெரிவித்த கருத்துக்கள் அவசியமானவை என்று தெரிவித்த அவர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள் என்றும், தான் அவர்கள் முன்னே குறிப்பிட்டவையைத் தவிர்த்திருந்தாலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடத் தயாராக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
டிரம்ப்பின் மீதான உச்ச நீதிமன்ற விசாரணை வெற்றிபெறுமா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் உள்ளன. ஏற்கனவே டிரம்ப்புக்கு எதிரான “உக்ரேனிய ஜனாதிபதியைத் தனது சொந்த விருப்பத்துக்கு இணங்காவிடின் அவர்களுக்கான அமெரிக்க அரசால் ஒதுக்கப்பட்ட நிதியைத் தரமாட்டேன்,” என்று மிரட்டியதாக நடந்த வழக்கில் அவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அலன் டெர்ஷோடிட்ஸ் “மீண்டுமொருமுறை டிரம்ப்புக்காக வாதாடி வெற்றிபெறக் காத்திருக்கிறேன்,” என்கிறார்.
பாராளுமன்றத்துக்குள் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நுழைந்து சேதப்படுத்தும் முன்னர் டிரம்ப் மேடையிலும், டுவிட்டரிலும் அவர்களை அதுபற்றி உசுப்பேத்தி விட்டதே அவரை நீதிமன்றத்தில் நிறுத்தக் காரணமாகிறது.
ஆனால், அவைகள் ஆதாரமாகக் குறிப்பிடப்பட முடியாதவை, ஏனெனின் அவை பேச்சுச் சுதந்திரத்துக்கு உட்பட்டவை என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். எதுவாயினும், அப்படியொரு பிரேரணை பின்னர் செனட் சபையிலும் நிறைவேறவேண்டும். அங்கே மூன்றிலிரண்டு பகுதியினர் அதற்காக வாக்களிக்கவேண்டும்.
அதனால், டெமொகிரடிக் கட்சியினர் மட்டுமன்றி டிரம்ப்பின் கட்சியின் 17 செனட்டர்களாவது அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும். அது நடக்குமா என்பதும் கேள்விக்குறி. டிரம்ப்பை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியாவிடினும் அப்படியொரு பிரேரணையைச் செனட் சபையில் கொண்டுவருவதன் மூலம் டிரம்ப்பின் கட்சிக்காரர்களை டிரம்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பக்கமெடுக்க நிர்ப்பந்திக்கவேண்டும் என்பதும் டெமொகிரடிக் கட்சியினரின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
அதன் மூலம் ரிபப்ளிகன் கட்சி அரசியல்வாதிகள் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டவேண்டிய நிலைமை ஏற்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்