இந்தோனேசியாவில் தடுப்பு மருந்துகளை உயர்மட்டத் தலைவர்கள் முதலில் பெற்றுக்கொண்டார்கள்.
ஜனாதிபதி ஜாகோ வுடூடுவில் ஆரம்பித்து நாட்டின் இராணுவ உயர்மட்டத் தலைவர்கள், மருத்துவ சேவையில் உயர்மட்டத்தினர், இஸ்லாமியத் தலைமை என்று ஒவ்வொருவராக இந்தோனேசியாவால் அவசரகாலப் பாவிப்புக்கு அனுமதிக்கப்பட்ட சீனாவின் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
டிசம்பர் 06 ம் திகதியன்று இந்தோனேசியா சீனாவிலிருந்து சினோவாக் தடுப்பு மருந்துகளைப் பெற ஆரம்பித்தது. மருந்துகள் குளிர் அறையில் கடுங்காவலுடன் பாதுகாப்பட்டுப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. மக்களை மருந்துகளின் மீது நம்பிக்கை வைக்கச் செய்வது தவிர நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மருந்துகளைக் குளிரில் வைத்து விநியோகிப்பது போன்றவை இந்தோனேசியாவின் சவாலாக இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய இஸ்லாமியக் குடித்தொகையைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் தடுப்பு மருந்து பன்றியில் இருந்து எடுத்த பொருட்களைக் கொண்டதா என்ற பெரும் சர்ச்சை எழுந்திருந்தது. எனவே, அது முஸ்லீம்களுக்கும் அனுமதிக்கப்பட்டது [ஹலால்] புனிதமானது என்ற செய்தியை நாட்டின் இஸ்லாமியத் தலைமை மூலமாகப் பரப்புவதும் ஒரு முக்கிய சவாலாக இருக்கிறது. எனவே தான் நாட்டில் இஸ்லாமியத் தலைமையும் முதல் கட்ட மருந்தை எடுக்கவேண்டியதாயிற்று.
846,000 தொற்றுக்களையும் 246,400 இறப்புக்களையும் இந்தோனேசியா சந்தித்திருக்கிறது. நோய்க்கெதிரான நாட்டு மக்களின் மொத்தப் பாதுகாப்புத் திறனை அடைய 181.5 மில்லியன் பேருக்கு இரண்டு ஊசிகள் போடப்படவேண்டும். எனவே ஒரு சிறு பகுதி சேதமடையும் என்ற எதிர்பார்ப்பில், மொத்தமாக 427 மில்லியன் ஊசி மருந்து தேவை என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
சீனாவின் தடுப்பு மருந்தை எகிப்து, துருக்கி, சிலே, பிரேசில் போன்ற நாடுகள் வாங்கியிருந்தாலும் அதன் மிகப்பெரிய கொள்வனவாளர் இந்தோனேசியாவாகும். பஹ்ரேன், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளே சினோவாக் தடுப்பு மருந்தை முதலில் பாவிக்க ஏற்றுக்கொண்டவையாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்