பாடசாலைகளின் கொரோனாப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் ஆஸ்திரியப் பெற்றோர் பலர் பிள்ளைகளை வீடுகளில் படிப்பிக்க ஆரம்பிக்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் பாடசாலைகளுக்குத் தமது பிள்ளைகள் அனுப்பாமல் நிறுத்தும் பெற்றோர்கள் ஆஸ்திரியாவில் அதிகரித்து வருகிறார்கள். காரணம் இம்மாதம் புதிய வருடத் தவணைகள் ஆரம்பித்ததிலிருந்து பாடசாலைகளில் கொண்டுவரப்பட்டிருக்கும் கொரோனாப் பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளாகும்.

  • வகுப்புக்குள் முகக்கவசமணிவது கட்டாயம் இல்லையென்றாலும் வகுப்புக்கு வெளியேயுள்ள நடைபாதைகளில் அவைகளை அணியவேண்டும். 
  • வாரத்தில் மூன்று தடவைகள் தொற்றுப் பரிசீலனை செய்துகொள்ளவேண்டும். அவைகளில் ஒன்று கட்டாயமாகப்  PCR முறையில் நடத்தப்படும்.
  • தடுப்பூசிகளைக் கொடுத்தல் 12 – 15 வயதினருக்கு விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அதைப் போட்டுக்கொள்ளாதவர்கள் தொடர்ந்தும் அப்பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.

அளவுக்கதிகமான கொரோனாக் கட்டுப்பாடுகளும். பரிசோதனைகளும் மாணவர்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்குகிறது என்கிறார்கள் ஒரு சாரார். அத்துடன் தமது பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட விரும்பாத பெற்றோர் அதற்காகத் தமது பிள்ளைகள் மற்றப் பிள்ளைகளால் ஏளனம் செய்யப்படலாம்,  குற்றஞ்சாட்டப்படலாம் என்று அஞ்சுகிறார்கள்.

ஆஸ்திரியாவில் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது கட்டாயமில்லை. அவர்களைப் பாடசாலைக்கு அனுப்பமாட்டோம் என்று அறிவிப்பைப் பெற்றோர் கொடுத்தால் மட்டுமே போதுமானது. அவர்கள் கல்வித் திணைக்களத்தால் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கான வருடாந்தரப் பரீட்சைகளில் பங்கெடுப்பார்கள்.

இதுவரை சுமார் 7,000 பிள்ளைகள் பாடசாலைக்குப் போகாமல் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ம்ற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து வகுப்பறையில் கற்காமல், பாடசாலைகளில் பழகாமல் இருக்கப்போகும் பிள்ளைகளின் நிலைமை பற்றி ஆஸ்திரியாவின் கல்வியமைச்சர் [Heinz Fassmann] ஹெய்ன்ஸ் பஸ்மன் விசனப்படுவதாகத் தெரிவிக்கிறார். 

பிள்ளைகளை வீட்டில் படிப்பிக்க முடிவுசெய்திருக்கும் பெற்றோரைக் கூட்டி அவர்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றிக் கலந்தாலோசிக்க அமைச்சர் விரும்புகிறார். அத்துடன் மாணவர்களை வருடாந்தரப் பரீட்சைகளில் மட்டுமன்றி இரண்டு தவணைப் பரீட்சைகளிலும் பங்குபற்றும் சட்டத்தை அமுல்படுத்தவும் திட்டமிடுகிறார்.

பாடசாலைக் கட்டுப்பாடுகள், பிள்ளைகளுக்குத் தடுப்பூசி கொடுத்தல் போன்றவைகளுக்கு ஆதரவானவர்களும், எதிர்பானவர்களும் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *