தடுப்பூசிகள் போடுவதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலிடம் டென்மார்க்குக்கு.
தனது நாட்டின் 2.2 விகித மக்களுக்கு முதலாவது தடுப்பூசியை வழங்கியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமது நாட்டின் பெரும்பான்மையான விகிதத்தினருக்குத் தடுப்பூசி வழங்கியிருக்கும் நாடு டென்மார்க் என்று பெருமையுடன் தெரிவிக்கிறார் பிரதமர் மெத்த பிரடெரிக்ஸன்.
118,000 டனிஷ் குடிமக்களுக்கு முதலாவது தடுப்பூசியை வழங்கியிருக்கும் டென்மார்க் முடிந்தவரை நாட்டின் பெருமளவு மக்களுக்கு தடுப்பு மருந்தின் முதலூசியை வழங்கிவருகிறது. இரண்டாவது தடுப்பூசியை அவர்கள் பாதுகாக்கவில்லை. அதற்கு முழுவதும் வித்தியாசமாக நோர்வே தனது இரண்டாவது தடுப்பூசியைத் தனியாகப் பாதுகாப்பில் வைத்திருக்கிறது. முதலில் தேவையானவர்களுக்கு முதலிலேயே இரண்டையும் கொடுத்துவிடவேண்டுமென்பது நோர்வேயின் திட்டம்.
வித்தியாசமான வழியாக தடுப்பூசியை முதலில் நாட்டின் மருத்துவ சேவையாளர்களுக்குக் கொடுத்து வருகிறது பின்லாந்து. மற்றைய நாடுகளோ நீண்டகால முதியோர் இல்லங்களில் வாழ்பவர்களுக்கும், நாட்டின் பலவீனமானவர்களுக்கும் அவர்களுடன் சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் முதலாவது தடுப்பூசியை வழங்கிவருகின்றன.
சுவீடனிலும், பின்லாந்திலும் தத்தம் குடிமக்களில் 80,000 பேருக்கு முதல் தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது. இரண்டாவது தடுப்பூசியை பின்னர் கொடுப்பதற்காகப் பாதுகாக்க இந்த நாடுகள் விரும்பவில்லை. முடிந்தவரை அதிகமானவர்களுக்குக் கொடுத்துவிடவே திட்டமிட்டிருக்கின்றன. இவ்வாரத்தில் சுவீடனில் மொத்தமாக கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகை 10,000 ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முடிந்தவரை வேகமாக இறப்பு எண்ணிக்கையைக் குறைக்கவேண்டுமென்பது குறிக்கோளாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்