பின்லாந்தில் நாட்டோ [OTAN] அடையாளத்துடன் படு பிரபலமாகியிருக்கிறது ஒரு பியர் வகை!

பின்லாந்தின் கிழக்கிலிருக்கும் சவொன்லின்னா நகரின் Olaf craft brewery  வடிப்பாலையில் நாட்டோ பெயரை வடிவாகக் கொண்ட பியர் ஒன்று தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சமீப மாதங்களில் பின்லாந்து அந்த ஆயுத அமைப்பில் சேர்ந்துகொள்வது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடந்து கடந்துபோன வாரத்தில் அதற்கான விண்ணப்பமும் கொடுத்தாயிற்று. நாட்டோ ஆதரவு பின்லாந்தில் அதிகரித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட அந்த பியர் வகை விற்பனையில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அந்த வடிப்பாலையின் உரிமையாளர் பெத்தரி வந்தின்னன். ஒரேயொரு வாரத்தில் அந்த பியரின் பெருமை எட்டுத் திசைகளிலும் பரவிவிட்டதாகச் சொல்கிறார்.

“கடந்த வாரம் வியாழன், வெள்ளிக்கிழமையில் தான் இந்த எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. உடனே அதற்கான வடிவமைப்புடன் பெயர்ச் சிட்டையைத் தயாரித்தோம். அதிர்ஷ்டவசமாக எமது கையிருப்பில் பெயரிடப்படாத பியர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்தன. உடனே நாம் அவற்றில் பெயர்ச்சிட்டைகளை ஒட்டி விற்பனைக்கனுப்ப அது படு வேகமாக விற்கப்பட ஆரம்பித்து விட்டது. வேறு நாடுகளிலிருந்து மட்டுமே தினசரி 200 பேர் கூப்பிட்டு அந்த பியர் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள்,” என்கிறார் வந்தின்னன் மகிழ்ச்சியுடன்.

ஏற்கனவே 8,000 லிட்டர் பியர் பின்லாந்து முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. தயாரிக்கப்படும் வடிப்பாலையில் தினசரி பலர் ஒரு பியரையாவது வாங்கிவிட வேண்டும் என்று வரிசையில் நிற்கிறார்கள். நூற்றுக்கணக்கான கி.மீ தூரத்திலிருந்தெல்லாம் அதை வாங்கிக்கொள்ள வருகிறார்கள்.

அடுத்த வாரத்திலிருந்து இரண்டு சர்வதேசப் பிரபல பல்பொருள் அங்காடிகளுடன் சேர்ந்து உலகமெங்கும் அந்த பியர் கிடைக்கச் செய்யவிருப்பதாக வந்தின்னன் குறிப்பிடுகிறார். 

“நான் ஒரு பியர் குடிக்கப்போகிறேன்,” என்பது பின்னிஷ் மொழியில் “ஒத்தான் ஒலுத்தா,” என்றாகிறது. நாட்டோ பின்னிஷ் மொழியில் குறுக்கி ஒத்தான் OTAN என்றழைக்கப்படுகிறது. எனவே அந்த பியரின் பெயர் பின்னிஷ் மொழியை விளையாடி அமைக்கப்பட்டிருப்பதால் அதன் பிரபலம் மேலும் செதுக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *