1.9 பில்லியன் டொலர்களாலான உதவிப் பொருளாதாரப் பொதியொன்றை ஜோ பைடன் பிரேரிக்கிறார்.
இன்னுமொரு வாரத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் ஏற்கனவே வேலையற்றவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 600 டொலர்களை 2,000 ஆக உயர்த்துவதுடனான ஒரு 1.9 பில்லியன் பொருளாதார உதவிப் பொட்டலத்தை அறிவித்திருக்கிறார்.
“வாரமொன்றுக்கு 40 மணி நேரம் வேலைசெய்யும் எந்த ஒரு அமெரிக்கத் தொழிலாளியும் வறுமையில் வாடக்கூடாது,” என்று குறிப்பிட்ட ஜோ பைடன் தேசிய அளவிலான அடிப்படைச் சம்பளத்தை 15 டொலர்களாக உயர்த்தப் போவதாகக் குறிப்பிடுகிறார். பத்து வருடங்களுக்கும் மேலாக அது 7.25 டொலர்களாகவே இருக்கிறது.
தனது பொருளாதார உதவிப்பொட்டலத்தில் அரசாங்க சேவைகளுக்கான செலவுகளைத் தற்காலிகமாக மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
“நான் குறிப்பிடுவது அமெரிக்காவுக்கு மலிவாக இருக்கப்போவதில்லை. ஆனாலும், இதைச் செய்யாமல் எங்களால் தவிர்க்க முடியாத நிலைமையில் இருக்கிறோம். எங்கள் நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்காகப் போராடவேண்டிய நிலையிலிருக்கிறோம்,” என்று குறிப்பிட்ட ஜோ பைடன். கொரோனாத் தொற்றுக்களை மருத்துவ சேவையில் எதிர்கொள்வதற்காக மேலும் 400 பில்லியன் டொலர்களை செலவழிக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். தான் ஜனாதிபதி பதவியேற்ற முதல் நூறு நாட்களில் 100 மில்லியன் தடுப்பூசிகள் முடிக்கப்பட்டிருக்கவேண்டுமென்பது அவரது குறி என்று அவர் தெரிவித்தார்.
ஜோ பைடன் குறிப்பிட்டிருக்கும் செலவுகளை அமெரிக்க செனட் சபை ஏற்றுக்கொள்ளுமா என்பது ஒரு கேள்விக்குறி. அங்கே மிகக்குறைந்த பெரும்பான்மையே அவரது டெமொகிரடிக் கட்சிக்கு இருக்கிறது. அவரது கட்சியும், எதிர்கட்சியும் 50/50 செனட்டர்கள் பலத்தில் இருக்கின்றன. அவரது டெமொகிரடிக் கட்சியினர் எல்லோரின் ஆதரவும் கிடைக்குமானால் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பிரத்தியேக வாக்குடன் அவரது தீர்மானங்கள் வெற்றிபெறலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்