கிரீஸின் பாதுகாப்பை நவீனப்படுத்த, அமெரிக்கா 9.4 பில்லியன் டொலருக்கு விற்கப்போகும் ஆயுதங்கள் பிரான்ஸுக்கு மூக்குடைப்பா?

பிரான்ஸுடனான நீர்மூழ்க்கிக்கப்பல் கொள்வனவை முறித்துக்கொண்டு அவற்றை அமெரிக்காவிடம் ஆஸ்ரேலியா வாங்கவிருப்பதால் ஏற்பட்ட மனமுறிவு ஆஸ்ரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையே சீராகவில்லை. இச்சமயத்தில் கிரீஸ் அதே போன்ற ஒரு ஆயுதக் கொள்வனவில் பிரான்ஸின் மூக்கை உடைக்கப் போகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கிரீஸின் பாதுகாப்புக்களை நவீனப்படுத்த அமெரிக்க அரசு அந்த நாட்டுக்குத் தனது ஆயுதத் தளபாடங்களை விற்பனை செய்வதன் மூலம் உதவவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது. சுமார் 9.4 பில்லியன் டொலர் பெறுமதியில் போர்க்கப்பல்களையும், சுமார் 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான நில, கடல் தாக்குதலுக்குரிய நவீனரகக் கப்பல்களையும் கிரீஸுக்கு விற்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

செப்டெம்பர் மாதத்தில் பிரான்ஸ் சுமார் 3.5 பில்லியன் டொலர் பெறுமதியான போர்க்கப்பல்களை கிரீஸுக்கு விற்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதுபற்றிய இறுதி முடிவுகள் வரவிருக்கும் மாதங்களில் எடுக்கப்படவிருக்கின்றன. கிரீஸுடனான இந்த வியாபாரம் பற்றி ஆஸ்ரேலியாவுடனான நீர்மூழ்கிக்கப்பல்கள் வியாபாரம் முறிவடைந்த கையோடு மக்ரோன் கிரீஸ் பிரதமர் மித்தோதாக்கிஸ் உடன் மேடையில் தோன்றி இவ்வியாபாரத்தை அறிவித்திருந்தார்.

அமெரிக்காவின் வியாபாரமானது போர்க்கப்பல்கள் உட்பட மற்றும் பல ஆயுதங்களையும் கிரீஸுக்கு விற்பதன் மூலம் அந்த நாட்டின் பாதுகாப்பை முழுசாக நவீனப்படுத்துவது பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே, பிரான்ஸின் போர்க்கப்பல்களை கிரீஸ் வாங்கப்போகும் ஒப்பந்தம் முழுசாக நிறைவேறுமா என்று கேள்வியெழுப்பப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்