உகண்டாவின் எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டை இராணுவம் முற்றுக்கையிட்டுக் கைப்பற்றியது.
வியாழனன்று நடந்த தேர்தலில் உகண்டாவின் ஜனாதிபதி முசேவெனி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 65 % விகிதத்தைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதேசமயம் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பொபி வைனின் வீட்டை இராணுவம் கைப்பற்றியிருக்கிறது.
பொபி வைனின் வீட்டை முற்றுகையிட்ட இராணுவத்தினர் தொலைத் தொடர்புகளையெல்லாம் துண்டித்துவிட்டு வீட்டைக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட செய்திகள் வெளிவருகின்றன. தேர்தலில் பல தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதாகவும் தான் உண்மையில் வெற்றிபெற்றுவருவதாகவும் பொபி வைன் தெரிவிக்கிறார்.
நாடு முழுவதும் இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்களுக்கு விபரங்களெதுவும் வெளிவர வாய்ப்பில்லை. 2016 இல் நடந்த தேர்தலின் முடிவுகள் வரும் சமயத்தில் இதே போலவே முசெவெனி 62 விகித வாக்குகள் பெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கிஸ்ஸா பிஸிகியே 33 விகித வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. அதே சமயம் பிஸிகியே தனது விபரங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க வீட்டோடு வளைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சர்வாதிகாரி முசெவெனி உள்நாட்டில் தனக்கு எதிராக முளைப்பவர்களெவரையும் கிள்ளியெறியத் தயங்கியதில்லை. அவருக்கு ஆரம்பகாலத்திலிருந்தே அமெரிக்க அரசுகளின் ஆதரவு இருப்பதால் வெளிநாடுகளின் எதிர்ப்பால் அவர் பாதிக்கப்படுவதுமில்லை. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டான உகண்டா அரசுக்கு அமெரிக்கா வருடாவருடம் 80 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவித்தொகையைக் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமையன்று மாலை கடைசியான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்