ஒஸ்கார் விருதுகளை அள்ளிய சினிமாவால் பிரபலமான தாய்லாந்து நகரம் வெறுமையாகிறது.
தாய்லாந்தில் காஞ்சனபுரியில் க்வா நொய் ஆற்றைக் கடக்கும் பாலம் “The Bridge over the River Kwai” என்ற சினிமாவால் பிரபலமாகி உலகெங்குமிருந்தும் சினிமா ரசிகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு தலமாகும். தாய்லாந்தில் கொரோனாப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளால் காஞ்சனபுரியிலும் பொது முடக்கம் அறிவிக்கப்படவே அங்கே தங்கியிருந்த சுற்றுலாப்பயணிகளெல்லாம் வெளியேறியபின்னர் வெளியிலிருந்து எவரும் வரலாகாது என்ற கட்டுப்பாடு ஆரம்பமாகியிருக்கிறது.
காஞ்சனபுரியில் நாலே நாலு பேர் மட்டுமே கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்களில் இருவர் ஏற்கனவே குணமாகிவிட்டாலும் நகரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது பற்றி சுற்றுலாவின் பொருளாதாரத்தில் தங்கியிருக்கும் மக்கள் விசனமுற்றிருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த வருடத்தில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் தமது 90 விகித வருமானத்தை அவர்கள் இழந்திருக்கிறார்கள். வீதியோரங்களில் கைவினைப் பொருட்களை விற்றுவருபவர்கள் சுற்றுலாப்பயணிகளின் தொகை வெகுவாகக் குறைந்துவிட்டதால் அரசாங்க உதவித் தொகையைப் பெற்று வாழவேண்டியிருக்கிறது.
1958 ம் ஆண்டு எட்டு ஒஸ்கார் விருதுகளை அள்ளிய The Bridge on the River Kwai சினிமாவின் மூலக்கதை Pierre Boulle என்ற பிரெஞ்சுக்காரலால் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பான்காரர்கள் தமது தொடர்ந்த தாக்குதலுக்காக க்வாய் என்ற நதி மீது ஒரு பாலத்தைக் கட்டுவிக்கிறார்கள். அதற்காக ஜப்பான்காரர்கள் பாவிப்பது தம்மிடம் போர்க்கைதிகளாக இருக்கும் பிரிட்டிஷ் இராணுவத்தினரையாகும். அமெரிக்கர்களின் ஜப்பான் மீதான தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் பிரிட்டிஷ் கைதிகள் அந்தப் பாலத்தைக் கட்டும் பணியை இழுத்தடிக்கிறார்கள் என்பதே கதை.
தாய்லாந்தில் இருக்கும் அந்தப் பாலம் அந்த நகரைப் பிரபலப்படுத்தியிருப்பதுபோலவே படத்தில் அதற்கான உண்மையான காட்சிகள் எடுக்கப்பட்ட சிறீலங்காவையும் பிரபலப்படுத்தியிருக்கிறது. சிறீலங்காவிலிருக்கும் கெலனிய ஓயாவின் ஒரு கிளையான மஸ்கெலிய ஓயாவுக்கு மேலே கித்துகல என்ற இடத்தில் தான் இதற்காக சுமார் கால் மில்லியன் டொலர்கள் செலவில் பாலத்தைக் கட்டினார் டெவில் லீன்.
சினிமா நடிகர்களும், படப்பிடிப்புச் சம்பந்தப்பட்டவர்களும் கித்துகல அரச தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் நடிக்கும் மற்றைய போர்க்கைதிகளாக அப்பிராந்தியத்தில் வாழ்ந்த சிங்களவர்கள் பலர் நடிக்கவைக்கப்பட்டார்கள். இச்சினிமாவில் பெரதெனியா தோட்டத்தின் பாகங்களும் படமாக்கப்பட்டிருந்தன.
சாள்ஸ் ஜெ. போமன்