செர்பிய மருத்துவர்களிடையே கொவிட் 19 இறப்புக்கள் மிக அதிகமாக இருக்கக் காரணமென்ன?
கொவிட் 19 ஆல் செர்பியாவில் ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் 3,600. ஏழு மில்லியன் குடிமக்களைக் கொண்ட நாடு செர்பியா. சாதாரண மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் மிக அதிகமாக இல்லாவிடினும் இறந்தவர்களில் மருத்துவர்கள் எண்ணிக்கையைக் கவனிக்கும்போது அது உலகிலேயே மிக அதிகமாக இருக்கிறது. 72 மருத்துவர்கள் இறந்திருக்கிறார்கள்.
சுமார் 60 மில்லியன் சனத்தொகையுள்ள நாடான பிரிட்டனில் கொவிட் 19 ஆல் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 43 ஆகும். நாட்டின் மொத்த உயிரிழப்புக்கள் 80,000 ஐத் தாண்டியிருக்கிறது. பிரிட்டனுடன் ஒப்பிடும்போது ஏழு மில்லியன் குடித்தொகையுள்ள செர்பியாவில் 72 மருத்துவர்களின் உயிர் கொவிட் 19 ஆல் பறிக்கப்பட்டிருப்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது.
செர்பியாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சு இதுபற்றி எவ்வித காரணங்களையும் வெளியிட மறுக்கிறது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். செர்பியாவின் மருத்துவ சேவை போன்றவைக்கு அரசு செய்திருக்கும் செலவுகள் 2013 க்குப் பின்னர் மிகவும் குறைவானதே என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
கொவிட் 19 பரவ ஆரம்பித்த தருணத்தில் அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண நோயாளிகள் பிரிவிலேயே கவனிக்கப்பட்டார்கள். அதே சமயம் நாட்டு மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் தொகை நீண்ட காலமாகவே பற்றாக்குறையாகவே இருந்தது. மருத்துவ சேவையாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் பெரும்பாலான மருத்துவமனையில் கிடைக்கவில்லை.
செர்பிய அரசு நாட்டின் மருத்துமனைகளில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களை மிரட்டி வருகிறது. கொவிட் 19 ஆரம்ப காலத்தில் மருத்துவ சேவையிலிருக்கும் குறைபாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை விபரித்த பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
செர்பிய மருத்துவர்களுக்கான ஊதியம் மற்றைய ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவாகவே இருப்பதால் அவர்கள் புலம்பெயர்கிறார்கள். மிச்சமிருப்பவர்கள் வாரத்தில் ஓரிரண்டு நாட்கள் விடுமுறையெடுத்துக்கொண்டு 24 மணி நேரம் வேலை செய்யப் பணிக்கப்படுகிறார்கள். செர்பிய மருத்துவர்களின் தொழிற்சங்கம் தமது அங்கத்தவர்கள் கொவிட் 19 தொற்றுக்கு மட்டுமன்றி அரசின் நடவடிக்கைகளுக்கும் பயந்துகொண்டே பணியிலிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். சாள்ஸ் ஜெ. போமன்