இஸ்லாமிய சகோதரத்துவம் இயக்கத்தினரின் சொத்துக்களை எகிப்து பறிமுதல் செய்கிறது.
2013 இல் அன்றைய பிரதமர் முஹம்மது முர்ஸியின் அரசாங்கத்தைக் கலைத்து அவரது அமைப்பான இஸ்லாமிய சகோதரத்துவத்தை உடைக்க ஆரம்பித்தது எகிப்திய இராணுவம். அல் இக்வான் அல் முஸ்லிமின் என்றழைக்கப்படும் அவ்வியக்கம் தீவிரவாத இயக்கமென்று பிரகடனம் செய்யப்பட்டது. 17 ம் திகதி ஞாயிறன்று அவ்வியக்கத்தினரின் சொத்துக்களை தன்னகத்தாக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
2018 இல் தீவிரவாதிகள், அவர்களின் இயக்கங்களின் உடமைகளைப் பறிப்பதற்காகப் போடப்பட்ட சட்டங்களைப் பாவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2019 இல் சிறையில் இறந்துபோன முஹம்மது முர்ஸி மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது உட்பட்ட அவரது சொத்துகள், அல் இக்வான் இயக்கத்தின் தலைவர் முஹம்மது பாதி, அவரது உதவியாளர் கைராத் அல் ஷத்தர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பெல்தகி ஆகியோருடைய சகல சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மூவரும் தற்போது சிறையிலிருக்கிறார்கள்.
அவர்கள் உடபட மொத்தமாக 89 பேரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதைத் தவிர இராணுவத் தளபதியாக இருந்து ஜனாதிபதியான அல் சிஸி எகிப்திய அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களையும், ஜனநாயக அமைப்புக்களையும் கூடக் கடுமையாக நடத்தி வருகிறார். 27 பத்திரிகையாளர்கள் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்