ஆண்களின் ஐஸ் ஹொக்கி கோப்பைப் பந்தயங்கள் பெலாரூசிலிருந்து மாற்றப்பட்டன.
பெலாரூசின் ஜனாதிபதி லுகஷெங்கோ அதிகாரத்தின் மீது, தான் வைத்திருக்கும் பிடியைத் தளர்த்தத் தொடர்ந்தும் மறுத்து வருகிறார். 26 வருடங்களாக பெலாரூசை ஆளும் ஐரோப்பாவின் சர்வாதிகாரி ஆகஸ்ட்டில் நடந்த தேர்தலில் தானே வென்றதாகப் பிரகடனப்படுத்தியதும் நாடே திரண்டெழுந்தது.
தேர்தல் ஒழுங்காக நடக்கவில்லையென்று சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டார்கள். தேர்தல் முடிவுகளும் அதுவரை கணிக்கப்பட்ட லுகஷெங்கோவின் தோல்விக்கு மாறாக 79 விகிதத்தால் வென்றதாகக் குறிப்பிடப்பட்டதை மக்கள் நம்பவில்லை. நாடெங்கும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் எழுந்தன. எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் தானே ஜனாதிபதியாக இருந்து வருகிறார் லுகஷெங்கோ.
எதிர்க்கட்சிக்காரர்கள் சிறைவைக்கப்பட்டும், நாட்டை விட்டுத் துரத்தப்பட்டும் வருகிறார்கள். நாடெங்கும் சிறு சிறு எதிர்ப்புப் பேரணிகள் தொடந்தும் நடக்கின்றன. ஆரம்பத்திலிருந்து ஒரு சில மாதங்களாக நடந்த வேலை நிறுத்தங்கள், பேரணிகள் எல்லாவற்றையும் அவைகளின் தலைவர்களைக் கைது செய்தும், மிரட்டியும் ஜனாதிபதி அடக்கிவிட்டார்.
சர்வதேச ரீதியில் எழும் விமர்சனங்களையும் லுகஷெங்கோ கொஞ்சமும் மதிக்கவில்லை. தனது நீண்டகால எதிரியான ரஷ்யாவிடம் தஞ்சம் புகுந்து அவர்களின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்கிறார்.
இவ்வருடம் பெலாருஸில் நடக்கவிருந்த ஆண்களின் ஐஸ் ஹொக்கிப் போட்டிகள் தற்போது அங்கு நடக்காது என்று சர்வதேச ஐஸ் ஹொக்கி அமைப்பு அறிவிக்கிறது. மக்களின் குரலைப் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்தும், பலரைச் சிறையிலிட்டும் வரும் லுகஷெங்கோ ஆட்சியில் இருப்பாரனால் தாம் நடக்கவிருக்கும் பந்தயங்களுக்கு உபயகாரர்களாக இருக்கமாட்டோமென்று முக்கிய நிறுவனங்களெல்லாம் பின்வாங்கிவிட்டன. அதனால், வேறு வழியின்றி இவ்வருடப் பந்தயங்கள் பெலாரூஸில் நடக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவை பதிலாக எந்த நாட்டில் நடக்குமென்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்