“நாம் பெலாரூஸுடன் ஒன்றுபடுவதை விரைவுபடுத்த மேற்கு நாடுகளின் தடைகள் அனுகூலமாக இருக்கின்றன,” என்கிறார் புத்தின்.

சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக இருந்த ரஷ்யாவின் எல்லை நாடான பெலாரூஸ் தனித்தனி நாடுகளாக இருப்பினும் இரண்டு நாடுகளின் குடிமக்களும் பரஸ்பரம் தத்தம் நாடுகளுக்குப் புலம்பெயர்வதையும், குடியுரிமை பெற்றுக்கொள்வதையும் ஏற்றுக்கொள்கின்றன. அவர்களிடையே மேலும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற மேற்கு நாடுகள் தம்மீது போட்டிருக்கும் தடைகள் அனுகூலமான சூழலை உண்டாக்குகின்றன என்று ரஷ்ய ஜனாதிபதி தான் பங்கெடுத்த மாநாடு ஒன்றில் தெரிவித்தார்.  

“சட்டவிரோதத் தடைகளால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைத்தல், தேவையான தயாரிப்புகளின் உற்பத்தியை எளிதாக்குதல், புதிய திறன்களை வளர்த்தல், நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகிய எங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான குறிக்கோள்களுக்கு நன்மையாகவே நிலைமை இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

1997 இல் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒன்றின்படி பெலாருசும், ரஷ்யாவும் பல விதங்களிலும் தமது நாடுகளை ஒற்றுமையாகப் பல திட்டங்களில் ஈடுபடுத்தி வருகின்றன. ஆரம்பத்தில் இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே மன வேறுபாடுகள் இருந்தன. 2020 இல் பெலாரூஸ் மக்கள் தமது சர்வாதிகாரி லுகசென்கோவுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தபோது புத்தின் தனது இராணுவத்தை அனுப்பி பெலாரூஸ் அதிபருக்கு உதவினார். அதையடுத்து அவர்களிடையேயான நட்பு ஏறுமுகமாகியிருக்கிறது.

பெலாரூஸும் ரஷ்யாவும் தமது இராணுவத்தை ஒன்றிணைந்து செயற்படும் நிலைக்கு வேகமாகக் கொண்டுவரவேண்டும் என்று கடந்த வாரம் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் செய்கேய் ஷொய்கு குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து ரஷ்யாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்திய லுகசெங்கோ ரஷ்யாவின் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் தளமாக பெலாரூஸ் பாவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *