Featured Articlesஅரசியல்செய்திகள்

அராபிய வசந்தம் ஆரம்பித்த துனீசியாவில் மீண்டும் அரசியல் கொந்தளிப்பு.

நாட்டின் அரசியல் நிலைமையை எதிர்த்து முஹம்மது புவஸீஸி தன் மீது தீவைத்துக்கொண்டு இறந்ததால் துனீசியாவே கொதித்தெழுந்தது 2010 இன் கடைசி நாட்களில். அன்றைய சர்வாதிகாரி தாக்குப்பிடிக்க முடியாமல் நாட்டை விட்டோடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் 10 வது நினைவு நாளில் நாடு மீண்டும் கொதிக்கிறது.

சர்வாதிகாரியைத் துரத்திப் பத்து வருடங்களாகியும் நாடு முன்னேறவில்லை. நாட்டின் குடிமக்களில் பெரும்பகுதியாக இளைஞர்களைக் கொண்ட துனீசியாவில் மிகபெரும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. ஜனநாயக ரீதியாக 90 விகித வாக்காளர்கள் பங்குபற்றிய தேர்தல் நடந்து புதிய தலைவர் வந்தும் பயனெதுவும் இல்லையென்ற கோபம் மக்களிடையே எழுந்திருக்கிறது. 

பென் அலி தப்பியோடியதையடுத்து மற்றும் சில அராபிய நாடுகளிலும் மக்கள் தத்தம் சர்வாதிகாரத் தலைவர்களுக்கெதிராகக் கொதித்தெழுந்தார்கள். எகிப்து, அல்ஜீரியா, மொரொக்கோ, பஹ்ரேன், லிபியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகளிலும் மக்கள் வெகுண்டெழுந்தார்கள். சில நாடுகளில் அதிகாரங்கள் மாறின, சிலவற்றில் அவை போர்களாக வடிவெடுத்து தொடர்ந்தும் பல்லாயிரக்கணக்கானோரைப் பாதித்து வருகின்றன.

அல்ஜீரியாவைப் பொறுத்தவரை ஜனநாயக மாற்றங்களிடையே இஸ்லாமியத் தீவிரவாதிகளும் தமது கைங்கரியத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள். நாட்டின் நிலைமை சீர்குலைந்தது. ஒரு வழியாக அத் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டிய அதே சமயத்தில் கொரோனா பேரழிவு ஆரம்பித்து அல்ஜீரியாவை வாட்டி வருகிறது.

பென் அலி நாட்டை விட்டோடியதை நினைவுபடுத்தும் நாள் முதல் ஆரம்பித்து நாட்டின் இளவயதினர் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனாக் கட்டுப்பாடுகளைத் துச்சமாக மதித்து நாடெங்கும் பேரணிகளும், கலவரங்களும் மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

வீதியிலிறங்கிப் போராடும் இளைய சமூகத்தினர் பட்டாசுகளை வெடித்து, பொலீசார் மீது கல்லெறிந்து அராஜகம் செய்து வருகிறார்கள். இராணுவமும் பொலீசும் மக்களைக் கலைந்துபோகச் செய்ய முயற்சித்து வருகின்றன. 1000 பேருக்கும் அதிகமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

போராட்டத்துக்குத் தலைவர்கள் எவருமிருப்பதாகத் தெரியவில்லை. அரசிடம் எந்த ஒரு கோரிக்கையும் வைக்கப்படவில்லை. ஆனால், வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு, பொருளாதாரச் சீரழிவு ஆகியவை முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய நிலையிலிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *