“எங்களைக் காப்பாற்றாமல் விட்டுவிடாதீர்கள், என்று வேண்டிக்கொள்கிறார்கள் சீனச் சுரங்கத்துக்குள் மாட்டிக்கொண்ட தொழிலாளிகள்.
சீனாவின் கிழக்கிலிருக்கும் ஷங்டொங் மாகாணத்திலிருகும் ஹுஷான் தங்கச் சுரங்கமொன்றுக்குள் வெடிவைத்துத் தகர்க்கும்போது 22 தொழிலாளிகள் மாட்டிக்கொண்டு ஒரு வாரமாயிற்று. சுரங்க வாசலிலிருந்து சுமார் 600 மீற்றருக்குக் கீழே இடிபாடுகளுக்குள் அவர்கள் அகப்பட்டிருக்கிறார்கள்.
விபத்து நடந்ததை ஹுஷான் சுரங்க நிறுவனம் அறிவிக்கச் சுமார் 30 மணித்தியாலங்களுக்கு மேலாயிற்று. சுரங்கத்துக்குள் யாராவது உயிரோடிருக்கிறார்களோ என்று தெரிந்துகொள்ள நீண்ட காலமாயிற்று. ஞாயிறன்றுதான் சுரங்கத்துக்குள்ளே ஒரு நீக்கலூடே ஒரு நூல் மூலம் கீழேயிருப்பவர்களிடமிருந்து ஒரு குறிப்பு வந்திருந்தது.
உள்ளேயிருந்த 22 பேர்களில் 12 பேர் உயிரோடு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அவர்களில் 11 பேர் ஒரு இடத்திலும் ஒருவர் அவர்களிடமிருந்து 11 மீற்றர் ஆழத்திலும் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் 10 பேரிடமிருந்து எவ்வித செய்திகளுமில்லை.
சுரங்கக் காப்பாற்றுப் படையினர் தங்களுடைய முயற்சிகளால் உள்ளேயிருப்பவர்களுக்கு உணவும், மருந்துகளும் கொடுக்க மூன்று துளைகள் செய்துவிட்டார்கள். அதன் மூலம் உதவிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் உள்ளேயிருப்பவர்களைச் சுற்றி நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும் அது எப்போ அவர்களை முழுவதுமாக மூழ்கடித்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அவர்கள் மாட்டிக்கொண்டிருக்கும் இடத்தில் பாறைகள் மிகவும் கடினமானவை என்பதால் அவர்களை நெருங்கும் வேலைகள் மிகவும் மெதுவாகவே நடந்து வருவதாகத் தெரிகிறது.
சுரங்கமிருக்கும் சமூகத்தின் தலைவரும், நகரத்தின் ஆளுனரும் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 30 மணி நேரம் விபத்தை அறிவிக்காமலிருந்ததற்காகவும், வெடிவிபத்து ஏன் நடந்தது என்பதற்காகவும் விசாரணைகள் நடக்கவிருக்கின்றன.
சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மோசமாக இருக்கும் நாடு சீனா. அங்கே இதே போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதுண்டு. டிசம்பர் மாதத்தில் இன்னுமொரு மாகாணத்தில் 23 சுரங்கத்தொழிலாளர்கள் விபத்தொன்றில் இறந்துபோயிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்