சுரங்கத்துக்குள்ளிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்ற மேலும் இரண்டு வாரங்களாகலாம்.
சீனாவின் தங்கச் சுரங்கத்துக்குள் வேலைசெய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தொன்றினால் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களின் உயிர்களைக் காக்கும் முயற்சி மெதுவாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
ஏற்கனவே ஒன்றரை வாரங்கள் கடந்த நிலையில் நிலத்துக்குக் கீழே மாட்டிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து போன்ற உதவிகளை தற்காலிகமாக உண்டாக்கிய ஓட்டைகளின் மூலம் கீழே அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை தொடர்பிலுள்ள 12 தொழிலாளர்கள் தவிர்ந்த மற்றைய 10 பேருடன் எந்தவிதத் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. எனவே அவர்களை உயிருடன் கொண்டுவரமுடியுமென்ற எதிர்பார்ப்பு அற்றுவிட்டது என்றே குறிப்பிடப்படுகிறது.
சுமார் 70 தொன்னுக்கும் அதிகமான கற்பாறைத் துண்டுகளுக்குக் கீழே தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டிருப்பதால், வேகமாக எதையும் செய்யமுடியவில்லை. நிதானமற்ற முயற்சிகள் அவர்களின் உயிரைக் குடித்துவிடலாம் என்கிறார்கள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள்.
தமது திட்டப்படி தொழிலாளர்களை வெளியே கொண்டுவர மேலும் 15 நாட்களோ அதற்கு மேலோ ஆகலாம் என்று கவலையுடன் குறிப்பிடுகிறார்கள் மீட்புப் படையினர். மாட்டிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக 15 பேர் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்