25 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டுக் கழுத்தில் விலங்குடன் வாழும் பெண் சீனாவை அதிரவைத்திருக்கிறாள்.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆரம்பிக்க ஒரு வாரம் முதல் பரவ ஆரம்பித்த ஒரு டிக்டொக் வீடியோ மன வளர்ச்சி குறைந்த ஒரு பெண் குடிலொன்றுக்குள் கழுத்தில் இரும்புச் சங்கிலியால் விலங்கிடப்பட்டு வாழ்வதைக் காட்டியது. எட்டுப் பிள்ளைகளைப் பெற்றிருக்கும் அப்பெண் அப்பிள்ளைகளுடன் கதவற்ற குடிலுக்குள் வாழ்கிறாள் என்பதை சீனாவின் பெங் என்ற நகரில் ஹுவாங்கூ என்ற கிராமத்தில் படம்பிடித்து அந்த நபர் வெளியிட்டிருக்கிறார். 

 அந்த வீடியோ படு வேகமாகச் சீனாவில் பரவி அந்த நாட்டின் சமூகவலைத்தளமான வெய்பூவில் அது பற்றி லட்சக்கணக்கானோரைக் கோபத்துடன் கேள்வி கேட்க வைத்திருக்கிறது. அக்கேள்விகளில் தீவிரமானவை பலவற்றை வெய்பூ அகற்றிவிட்டது. 2007 இல் வெளியான Blind Mountain என்ற சினிமாவில் கடத்தப்பட்டு மலைபிராந்தியத்தில் விற்கப்பட்ட ஒரு பெண் கடுங்குளிரில் இதுபோன்ற சூழலில் வாழ்வதைக் காட்டியிருந்ததைப் பலரும் ஞாபகப்படுத்திப் பேச ஆரம்பித்தார்கள். 

வீடியோ வெளியான இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜனவரி 28 இல் அந்த நகர அதிகாரிகள் அப்பெண் மன நலம் குன்றியவள் என்றும் பிள்ளைகள் உட்படத் தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தாக்குபவள் என்று குறிப்பிட்டு விளக்கமளித்தது. படமெடுத்தவர் அதிகாலையில் சென்றதால் அந்தக் குடிலில் அவள் குளிருக்குள் மிகக்குறைந்த உடையுடன், அழுக்காக இருந்ததாகக் குறிப்பிட்டார்கள்.

அதிகாரிகளுடைய விளக்கங்களை மக்கள் ஏற்காமல் அதுபற்றியும் சீனாவில் பரவலாக இருக்கும் மனிதக் கடத்தல் பற்றியும் விவாதித்து வருகிறார்கள். இதே போன்ற வேறு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் எப்படி ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள் என்றும் பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 

அந்தப் பெண் பற்றிப் பலர் விசாரித்தும், பெண்களுக்கு உதவும் அமைப்புக்கள் விபரங்களைத் தேடியதிலும் அவள் சுமார் 25 வருடத்துக்கு முன்னர் கடத்தப்பட்ட ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. மில்லியன் கணக்கானோர் அப்பெண்ணுக்கு நகர அதிகாரிகள் என்ன உதவிகள் செய்துகொண்டிருக்கிறார்கள், பிள்ளைகளின் நிலைமை என்ன போன்ற கேள்விகளால் தொடர்ந்தும் எழுப்பி வருகிறார்கள்.

சீனாவின் குடும்ப நலத் திணைக்களம், மனவளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவும் அதிகாரிகள் ஆகியோர் அப்பெண் பற்றிய விபரங்களை மேலும் ஆராய்ந்து, அவளுடைய நல்வாழ்வுக்கும் உதவுவதாக உறுதி கூறி அவ்விபரங்களை விரைவில் பதிவேற்றுவதாகக் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்