எஸ்கொபாரால் கொண்டுவரப்பட்ட நீர்யானைகள் பல்கிப் பெருகுவதை கொலம்பிய அரசு விரும்பவில்லை.

சர்வதேச ரீதியில் நாடுகளையே கலங்கவைத்த போதைப்பொருட்கள் தயாரிப்பாளர் பவுலோ எஸ்கோபார் 1980 களில் தனது சொந்த நிலப் பிராந்தியத்துக்குள் கடல் யானைகளை வளர்த்தான். கொலம்பியாவில் அதுவரை இல்லாத அந்த விலங்குகள் சட்டத்துக்கு விரோதமாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அம்மிருகங்களைத் தற்போது “ஆக்கிரமிக்கும்\விரும்பப்படாத உயிரினங்கள்” என்று கொலம்பியாவின் அரசு பிரகடனப்படுத்த விரும்புகிறது.

 எஸ்கொபார் 1993 ம் ஆண்டு இறந்தபின் அவனது நிலப்பகுதிக்குள் வளர்த்து வரப்பட்ட நீர்யானைகள் சுற்றிவர இருக்கும் பிராந்திய நீர்நிலைகளுக்குள் பரவியிருக்கிறது. அவைகள் இலக்கத்தில் சுமார் 130 ஐ எட்டியிருக்கின்றன. மேலும் எட்டு வருடங்களில் அவைகள் பல்கிப் பெருகி சுமார் 400 ஆகிவிடும் என்று கணிக்கப்படுகிறது.

ஒரு பிராந்தியத்தில் இல்லாமலிருந்த விலங்குகளோ, தாவரங்களோ புதியதாக அங்கே நுழைந்து பரவ ஆரம்பித்தால் அவை ஏற்கனவே அங்கு இயற்கையாக வாழ்ந்துவரும் விலங்குகள், தாவரங்களின் வளர்ச்சிக்கு இடையூறாகலாம். அது நீண்ட கால மாற்றத்தில் அப்பிராந்தியத்தின் சூழலையே மாற்றியமைக்கலாம் என்பதால் புதியதாக நுழையும் உயிரிங்கங்கள், தாவரங்கள் கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தடுக்க சுற்றுப்புற சூழல் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. 

நீர்யானைகள் கொலம்பியாவில் தொடர்ந்தும் பல்கிப் பெருகுவதைத் தடுக்க அவைகளின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் முதல் அவைகளை முழுவதுமாகக் கொல்லும் நடவடிக்கைகள் வரை ஆலோசிக்கப்படுவதாக நாட்டின் சுற்றுப்புற சூழல் அமைச்சர் கார்லஸ் கொரெயா குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவரை எவ்வித முடிவும் நிச்சயமாக எடுக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டும் அமைச்சர் நாட்டின் இயற்கை வள ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளுடன் ஆலோசித்த பின்னரே திட்டவட்டமான தீர்மானம் எடுக்கப்படும் என்கிறார். விஞ்ஞானிகளோ அந்த விலங்குகள் கொலம்பியாவின் பாரம்பரிய இயற்கை விலங்குகளல்ல என்பதால் இயற்கைக்குத் தீங்குகள் உண்டாகும் என்கிறார்கள்.

தமது சூழலில் புதியதாக நுழைந்திருக்கும் நீர் யானைகளை அப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் வரவேற்கிறார்கள். அவ்விலங்குகளால் மீன்பிடிக்கச் சென்ற ஓரிருவர் தாக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடையே அம்மிருகங்களைக் கொல்லலாகாது என்ற கருத்தே பெரும்பாலும் இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்