எங்கள் காடுகள் உலகின் சொத்து அதைப் பாதுகாக்க வேண்டுமானால் கடன் விடுதலை தாருங்கள் – கொலம்பியா

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா தனது இயற்கை வளமான படிம எரிபொருட்களை எடுப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. அவற்றைப் பாவிப்பதை நிறுத்தவும் தயார் என்று அறிவிக்கிறது. அதற்காக நாட்டின் சுற்றுப்புற சூழல் மேம்பாட்டு அமைச்சர் கோருவது உலக நாடுகள் கொலம்பியாவுக்குக் கொடுத்திருக்கும் கடன்களை அறவிடாமல் நிறுத்தவேண்டும் என்பதாகும்.

இடதுசாரி வேட்பாளர் குஸ்தாவோ பெத்ரோ சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொலம்பியாவின் தேர்தலில் வெற்றிபெற்றார். அவரது கட்சி தேர்தலுக்குப் போகும்போது கொடுத்த வாக்குறுதிகளிலொன்று நாட்டில் எரிநெய் உறிஞ்சலை நிறுத்தப்போவதாகும். பழங்குடிமக்கள் பரவலாக வாழும் நாட்டின் அமெஸான் காட்டுப்பகுதிகளில் அவைகள் இருக்கின்றன. அந்தத் தொழில்துறையால் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச் சூழல் மோசமாவதுடன் காடுகளும் அழிக்கப்படுகின்றன, பாதிக்கப்படுகின்றன. 

பெற்றோலியப் பொருட்களே நாட்டின் அரைவாசி ஏற்றுமதிப் பொருட்களாக இருக்கின்றன. நாட்டுக்குப் பெரும் வருமானம் தரும் அவை நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் அவசியமாக இருந்து வருகின்றன. ஆயினும், எதிர்காலத்தில் அந்த இயற்கை வளத்தை உபயோகிப்பதை நிறுத்துவதுடன் படிப்படியாக அவைகளைப் பாவிப்பதையும் நிறுத்தத் தயார் என்று நாட்டின் சுற்றுப்புற சூழல் மேம்பாட்டு அமைச்சர் கூறுகிறார். 

சுற்றுப்புற சூழல் மேம்பாட்டு அமைச்சர் சுசானா மொகமத் பத்திரிகையொன்றில் அமெஸான் காடுகள் அழிக்கப்படாமல் இருப்பது உலகுக்கு அவசியம் என்பதைக் குறிப்பிட்டு அது கொலம்பியாவுடையது மட்டுமன்றி உலகின் சொத்து என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் பதவியேற்ற  அவரது அரசு உலக நாடுகளிடம் பதிலாகக் கோருவது தமது நாட்டின் கடன்களை வெளிநாடுகள் அறவிடாமல் நிறுத்திவிட வேண்டும் என்பதாகும்.  

மேற்கண்ட திட்டம் நாட்டில் மிகவும் சர்ச்சைக்கு உரியதாகும் என்று சுட்டிக்காட்ட சுசன்னா முகமது தவறவில்லை. ஏனெனின், படிம எரிபொருட்களினால் வரும் வருமானம் நாட்டின் 20 % பொருளாதாரத்துக்குச் சமமானதாகும். நாட்டின் வரிவருமானங்கள் அறவிடுதல் செலவிடுதல் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து நாட்டின் விவசாயத்துறையையும், சுற்றுலாத்துறையையும் மேம்படுத்துவதன் மூலம் தமது திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் தெரிவிக்கிறார். 

சுமார் 20 – 30 வருடங்களுக்கு சர்வதேச உதவி அமெஸான் காடுகளின் மேம்பாட்டுக்காக வழங்கப்படவேண்டும். அதன் மூலமே கொலம்பியா சூழல் மாசுபாடு செய்யாத தொழில்துறைகள் மூலம் உலகுக்கு அத்தியாவசியமான அமெஸான் காடுகளைப் பாதுகாத்துத் தனது பொருளாதாரத்தையும் நிலையானதாக வைத்துக்கொள்ள முடியும் என்கிறார் சுசான்னா முகம்மது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *