நேபாளிய நடிகர் போல் ஷாவுக்கு அடுத்ததாக கிரிக்கெட் குழு தலைவர் மீது கற்பழிப்புக் குற்றச்சாட்டு.

நேபாளத்தின் கிரிக்கெட் குழுத் தலைவர் சந்தீப் லமிச்சானே தன்னைக் கற்பழித்ததாகப் 17 வயதுப் பெண்ணொருத்தி குற்றஞ்சாட்டியிருக்கிறார். கார்ட்மண்டுவில் தான் லமிச்சானேயைச் சந்தித்ததாகவும் அங்கிருந்த ஹோட்டல் அறையொன்றுக்கு அவர் தன்னைக் கூட்டிச்சென்று கற்பழித்ததாகவும் அக்குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து கிரிக்டெட் வீரரைக் கைது செய்ய நேபாளின் நீதிமன்றமொன்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

T20 பந்தயங்களில் அதிகம் விளையாடி வரும் லமிச்சானே சர்வதேச பந்தயங்களில் 2018 முதல் பங்குபற்றுகிறார். கடந்த வருடத்தில் அவர் நேபாளிய தேசியக் கிரிக்கட் விளையாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் அவ்வருடம் முதல் டெல்லி கப்பிடல் கிரிக்கெட் குழுவுக்காக விளையாடுபவராகும். தற்போது அவர் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் Jamaica Tallawah குழுவுக்காக விளையாட்டுச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

லமிச்சானே வெளி நாட்டில் இருக்கும் பட்சத்தில் அவரை நாட்டுக்குக் கொண்டுவர இண்டர்போல் உதவி நாடப்படலாம் என்று நேபாளிய பொலிஸ் அதிகாரம் குறிப்பிடுகிறது. “அவர் எங்கள் விளையாட்டு வீரர். குற்றம் செய்திருப்பின் அவர் சாதாரண குடிமகன் போல நீதியை எதிர்கொள்ளவேண்டும்,” என்று நேபாளிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருக்கிறது. 

தன்மீது சாட்டப்பட்டிருக்கும் கற்பழிப்புக் குற்றத்துக்கு மறுப்புத் தெரிவித்து லமிச்சானே செய்தி வெளியிட்டிருக்கிறார். தான் நேபாளின் நீதிபரிபாலனத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தன்மீது போடப்பட்ட அவதூறான குற்றச்சாட்டை எதிர்கொள்ள விடுமுறை எடுத்துக்கொண்டு நாடு திரும்பவிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் டிக்டொக் நிகழ்ச்சிகள் செய்யும் பெண்ணொருவர் நேபாளின் பிரபல நடிகரான போல் ஷா தன்னைக் கற்பழித்ததாகக் குற்றஞ்சாட்டினார். பால்ய வயதில் தன்னை வன்முறைக்குள்ளாக்கியது பற்றி அவர் வெளியிட்ட விபரங்களால் மக்கள் பொங்கியெழுந்து நாட்டில் கற்பழிக்கப்படும் பெண்களின் நிலைமைகளை எதிர்த்து குரலெழுப்பியிருந்தார்கள்.

இவ்வாரத்தில் தான் போல் ஷா மீது நீதிமன்ற விசாரணைகள் முடிந்து இரண்டரை வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *