மீண்டும் நேபாளத்தில் விமான விபத்து, 72 பேருடன் பறந்த விமானத்தில் இதுவரை சிலர் மட்டுமே தப்பியிருக்கிறார்கள்.

நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவிலிருந்து 72 பேருடன் புறப்பட்ட விமானமொன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே விபத்திலிருந்து தப்பியிருக்கலாம் என்று உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆரம்பத்தில் 10 பேர் மட்டுமே இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுப் படிப்படியாக உயர்ந்த இலக்கம் 67 பேர் இறந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

நேபாளம் மலைகள் பல நிறைந்த நாடு. அதனால் காலநிலை அடிக்கடி மாறுவதுண்டு. அதன் நிலப்பரப்பின் காரணமாக விமான விபத்துக்கள் அங்கே அடிக்கடி நடக்கிறது. அத்துடன் விமான நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் நேபாளத்தின் விமானங்கள் எதையும் தனது வான்வெளியில் பறக்க அனுமதிப்பதில்லை.

விபத்துக்குள்ளாகி நொருங்கிய விமானத்தில் 53 நேபாளியர்களும், ஆறு குழந்தைகள் உட்பட்ட 15 வெளிநாட்டவர்களும் இருந்ததாக விபத்துக்குள்ளான Yeti Airlines விமான நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. 1992 இல் பாகிஸ்தான் தேசிய விமான நிறுவனத்தின் விமானமொன்று காட்மண்டுவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி நொருங்கி சுமார் 167 பேரின் உயிரைக் குடித்தது. அதற்குப் பிறகு அங்கே நடந்த விமான விபத்துக்களில் மோசமான விளைவுகளைக் கொண்டது இவ்விபத்தாகும். கடந்த வருடம் மே மாதத்தில் Tara Air  விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் மரணமடைந்தார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *