ஐக்கிய ராச்சியத்தின் மக்கள் ஆரோக்கிய சேவையில் தொடர்ந்தும் பெரும் நெருக்கடி.

கொரோனாத்தொற்றுக்கள், அரசியல் நெருக்கடிகள், வேலை நிறுத்தங்கள், மருத்துவ சேவையில் ஊழியர்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டு பல முனை அழுத்தங்களால் ஐக்கிய ராச்சியத்தின் மக்கள் ஆரோக்கிய சேவை தடுமாறிக்கொண்டிருக்கிறது. பல மாதங்களாகவே தொடர்ந்துவரும் நிலைமை டிசம்பரில் கடுமையாக மோசமாகியிருக்கிறது. அச்சமயத்தில் இருதயத்துடிப்புப் பலவீனம், பக்கவாதம் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவசரகால வாகனங்களுக்காகச் சுமார் ஒன்றரை மணி நேரம் காக்கும் காத்திருக்கவேண்டியதாயிற்று.

ஜனவரி மாதத்திலும் மேற்குறிப்பிட்ட மோசமான நிலைமை தொடர்ந்து வருகிறது. அவர்கள் ஆகக்கூடியது 18 நிமிடங்களுக்கு அவசரகால வாகனத்தின் உதவியைப் பெறவேண்டும் என்பது மக்கள் ஆரோக்கிய சேவையின் குறிக்கோள் ஆகும். சகலவிதமான நோயாளிகளுக்கும் அவசரகாலச் சேவை கிடைக்கும் நேரம் பெருமளவு அதிகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. அவசரமாகச் சிகிச்சை பெறவேண்டியவர்கள் சராசரியாக நான்கு மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

மருத்துவமனைகளின் செயற்பாடுகள் மாற்றம், செலவு குறைப்பு நடவடிக்கைகளால் அவைகளில் தங்கி மருத்துவசேவை பெற வருபவர்களுக்கு அறைகளில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாகியிருக்கிறது. நோயாளிகள் தாள்வாரங்களிலும், அறைகளுக்குப் போகும் நடைபாதைகளிலும் சிகிச்சை பெறுவது சாதாரணமான காட்சியாக இருப்பதாகப் பலரும் தெரிவிக்கிறார்கள். இத்தகைய நிலைமையை ஐக்கிய ராச்சியத்தின் மருத்துவ சேவையினர் தமது சேவைக்காலத்தில் கண்டதில்லை என்று விபரிக்கிறார்கள்.

அதேசமயம், மருத்துவ சேவையின் வெவ்வேறு துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சில வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வேலைக்குத் திரும்பும்போது இன்னொரு சாரார் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கத் தயாராகிறார்கள். அவசரகாலச் சிகிச்சை வாகன ஓட்டிகள் தமது வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ளும்போது மருத்துவசேவைத் தாதிகள் தமது வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவிருக்கிறார்கள்.

அதிக சம்பளக் கோரிக்கை, சேவை செய்யுமிடங்களில் சூழல் மேம்பாடு, வேலை நேரக்கட்டுப்பாடுகள் மாற்றம் போன்றவைகள் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக இருந்து வருகிறது. அவைகளைத் தீர்த்தாலே மருத்துவ சேவைத்துறைக்கு வரவிரும்புபவர்கள் தொகை அதிகரிக்கும், அதன் மூலம் நீண்ட காலமாக அத்துறையில் ஏற்பட்டிருக்கும் பலமான நெருக்கடி இலேசாகும் என்று அத்தொழிலாளர்களின் தலைவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 

தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்குக் கையை விரிக்கிறார்கள் ஆளும் கட்சித் தலைவர்கள். தற்போதைய நிலைமையில் ஊதிய உயர்வு உட்பட்ட மற்றைய மேம்பாடுகளைச் செய்யுமளவிற்கு மக்கள் ஆரோக்கிய அமைச்சிடம் பணம் இல்லை என்கிறார்கள் அவர்கள். அப்படிச் செய்வதானால் அதே சேவையின் ஒரு பகுதியில் செலவைக் குறைத்தே இன்னொரு பகுதிக்காகச் செலவிடவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *