சீன அரசின் தொலைக்காட்சி மீது பிரிட்டன் மில்லியன்கள் தண்டம் விதித்திருக்கிறது.

சீன அரசாங்கத்தின் சர்வதேச ஊடகமான CGTN அங்கே கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் குய் மின்ஹாய் தான் குற்றஞ் செய்ததாக ஒத்துக்கொண்ட படங்களை இரண்டு தடவைகள் சமீபத்தில் ஒளிபரப்பியது. சீனாவின் பொலீஸ் பாதுகாப்பு விசாரணையில் அவர் அதைச் செய்ததாகக் காட்டப்பட்டது.

சீன அரசையும் அது குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை எப்படி நசுக்குகிறது என்பவையும் பற்றி 200 க்கும் அதிகமான புத்தகங்களை எழுதிப் பிரசுரித்த குய் மின்ஹாய் சுவீடன் குடியுரிமை கொண்டவர். 2015 இல் தாய்லாந்தில் அவர் திடீரென்று காணாமல் போனார். சில மாதங்களுக்குப் பின்னர் சீன அரசு குய் மின்ஹாய் தானாகவே சீனாவுக்கு வந்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஒழுகி நடப்பதாக ஒத்துக்கொண்டு, தன்னைக் கையளித்ததாக அவர் கூறும் படங்களை வெளியிட்டிருந்தது.

அவர் சீன அரசின் இரகசியப் பொலீசாரால் கடத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரும் அவரது ஊடக வெளியீட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் இதே போன்றே திடீரென்று காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். மனித உரிமைக் குழுக்கள் அவர்கள் சீன அரசால் கடத்திச் செல்லப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு வருகின்றன.

குய் மின்ஹாய் குற்றஞ் செய்ததாக ஒத்துக்கொண்டு வெளியிட்டிருக்கும் படங்கள் அவரைச் சித்திரவதை செய்து அவரிடமிருந்து பெறப்பட்டிருப்பதாகவே சந்தேகப்படுகிறார்கள் அவருடைய குடும்பத்தினரும், மனித உரிமைக் குழுவினரும். 

பிரிட்டனில் வெளியிடப்பட்டிருக்கும் குய் மின்ஹாயின் 10 நிமிடப் பேட்டியில் அவர் அழுதுகொண்டு தனது குற்றங்களை ஒத்துக்கொள்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அது அவரை அவமானப்படுத்திக் கேவலப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டி பிரிட்டனின் ஒலி-ஒளிபரப்புகளைக் கண்காணிக்கும் அதிகாரம் சுமார் 274,000 டொலர்கள் தண்டம் விதித்திருக்கிறது.

பிரிட்டனில் ஊடக வெளியீட்டுக்கான உரிமை இவ்வருட ஆரம்பத்தில் CGTN இடமிருந்து பறிக்கப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *