வாடகை மின்சார ஸ்கூட்டர்கள் சேவையைத் தொடர்வதா என்று பாரிஸ் நகரமக்களிடம் வாக்கெடுப்பு.

சமீப வருடங்களில் பிரபலமாகியிருக்கும், வாடகை மின்சார ஸ்கூட்டர் சேவைகளைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்று பாரிஸ் நகர ஆளுனர் ஆன் ஹிடால்கோ தனது குடிமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறார். அந்த வாகனம் பிரபலமாகியிருக்கும் அதேசமயம், போக்குவரத்தில் அவைகளைத் தாறுமாறாகப் பலர் பாவித்து இடைஞ்சலை மட்டுமல்ல ஆபத்தையும் ஏற்படுத்தி வருவதே அதன் காரணமாகும்.

தமது அவசர தேவைகளுக்காகவே பெரும்பாலும் அச்சேவையை பாவிப்பவர்கள் மற்றவர்களையும், சட்டங்களையும் துச்சமாகக் கருதி நடந்து வருவதைப் பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவ்வாகனத்தை நடைபாதைகளில், பூங்காக்களில் ஓடுபவர்கள், சிகப்பு விளக்குகளை அலட்சியம் செய்வோர், மற்றவர்களை மோதுவோர் பலராகும்.

சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாமலிருக்கும் அந்த வாகனம் உலக நகரங்கள் பலவற்றில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாரிஸ் நகரை பச்சைப்பசேலென்று ஆக்கவேண்டுமென்ற குறிக்கோளைக் கொண்ட ஆளுனரே அதைப் பாவிப்பவர்கள் பலரின் தவறுகளால் அதைத் தடை செய்ய உத்தேசிக்கிறார். நகரில் மூன்று நிறுவனங்களால் சுமார் 15,000 மின்சார ஸ்கூட்டர்கள் வாடகைக்குக் கொடுக்கப்படுகின்றன. மார்ச் மாதத்தில் காலமாகும் அவர்களுடைய ஒப்பந்தத்தை நீட்டுவதை நகர நிர்வாகம் விரும்பவில்லை.

ஏப்ரல் 02 ம் திகதி நடத்தப்படவிருக்கும் வாக்கெடுப்பில் “அந்த வாகனத்தைத் தொடர்ந்தும் பாவிப்பதா?” என்ற ஒற்றைக் கேள்வி குடிமக்களிடம் கேட்கப்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *