இன்று முதல் நோர்வேயின் தலைநகரம் பொதுமுடக்கத்தில்!
இன்று [23.01]காலை நடந்த பிரத்தியேகமான பத்திரிகையாளர் சந்திப்பில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவும் அதன் சுற்றுவட்டாரத்திலிருக்கும் 10 நகரசபைப் பிராந்தியங்களும் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படியான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
ஒஸ்லோவின் அருகிலுள்ள Nordre Follo என்ற நகரசபைக்குள் இருக்கும் நீண்டகால முதியோர் இல்லமொன்றில் வாழும் 12 முதியவர்களும், 22 சேவைத் தொழிலாளர்களும் பிரிட்டனில் இருந்து பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமியால் தொற்றியதாகக் காணப்பட்டதாகும். அவர்களுக்குத் தொற்று இருப்பதாக அறியப்பட்டதையடுத்து நடாத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் அத்தொற்றின் மூலம் எது என்பதை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனபதே நோர்வே அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் இந்தக் கடுமையான பொது முடக்கத்தின் காரணமாகும்.
சாதாரண உணவுவகைகள் விற்கப்படும் கடைகள், எரி நெய் விற்கப்படும் மையங்கள், மருந்துக் கடைகள் தவிர சகலவிதமான வியாபார இடங்களும், பாடசாலைகள், குழந்தைக் காப்பகங்கள் உட்பட்ட சேவை இடங்களும் மூடப்படுகின்றன. மக்கள் வீட்டுக்கு வெளியே முடிந்தவரை வெளியேறாமலிருக்குமாறு கேட்கப்படுகிறார்கள்.
நோர்வேயில் இதுவரை சுமார் 60,000 பேருக்குத் தொற்றுக்கள் இருப்பதாகவும் 544 இறப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இன்று அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் ஜனவரி 31 ம் திகதிவரை புழக்கத்திலிருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்