டெல்டா திரிபின் கடுமையான, வேகமான தாக்கம் பிரிட்டனை மட்டுமன்றிச் சீனாவையும் கலங்க வைத்திருக்கிறது.

இன்று காலையிலேயே ஊடகங்களுக்குக் கசிந்துவிட்ட “ஜூன் 21 அல்ல ஜூலை 19 ம் திகதி” என்ற பிரிட்டனின் சமூகத்தை முழுவதுமாகத் திறக்கும் திகதி பின்போடப்பட்டதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஊர்ஜிதப்படுத்தினார். இன்று  நாட்டோ அமைப்பின் கூட்டங்களில் பங்குபற்றிய அவர் ஐக்கிய ராச்சியத்தில் ஒரு பகுதியாரைக் கோபப்படுத்தி இன்னொரு பகுதியினரை ஆசுவாசப்படுத்தும் செய்தியை நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.

இந்தியாவில் முதலில் காணப்பட்ட டெல்டா திரிபுதான் தற்போது பிரிட்டனில் காணப்படும் பரவல்களில் 90 % என்று குறிப்பிடப்படுகிறது. மே மாதத்தில் 2,000 ஆக இருந்த தினசரித் தொற்றுக்கள் தற்போது 7,000 ஐ அடைந்திருக்கிறது. அந்தத் திரிபானது 60 % அதிக வேகத்தில் பரவுவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்குள்ளாவதற்கு மற்றவைகளைவிட 50 % அதிக சாத்தியமுண்டாக்குவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

“கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதுமில்லாத அளவுக்கு அதிவேகமான அவசரகாலச் சிகிச்சை கடந்த மாதத்திலிருந்து வரும் நோயாளிகளுக்குத் தேவைப்படுகிறது,” என்று ஏற்பட்டிருக்கும் நிலைமையை விளக்குகிறார் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த ரக்ஹீப் அலி. 

“தடுப்பு மருந்துகளுக்கு முன்னர் நோயாளிகளின், இறப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பாக்கவேண்டியிருந்தது. இப்போ நாலு வாரங்கள் படுவேகமாக பல மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசிகளைப் போடுவதற்காகப் பாவிக்கவேண்டும். அது படிப்படியாகக் கடும் நோயாளிகளையும், இறப்புக்களையும் குறைக்கும்,” என்று தொடர்ந்து கூறுகிறார் ரக்ஹீப் அலி.

மற்றைய திரிபுகள் பெரும்பாலும் பலவீனர்களையே கடுமையான நோய்க்குள்ளாக்கியிருந்தது. டெல்டா திரிபு இளவயதினரிடையேயும், தடுப்பூசி போட்டிராதவர்களிடையேயும் வேகமாகப் பரவிக் கடுமையான நோயாளிகளாக்குவதைக் காணமுடிவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களும் இறந்தவர்களில் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது பாவிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் பலமாக டெல்டா திரிபுக்கெதிரான சக்தியைக் கொடுக்கவில்லை. ஆனால், அவ்விபரங்கள் இதுவரை தெளிவாக ஆராயப்படவில்லை.

டெல்டா திரிபின் கடுமையான, விரைவான தாக்குதல் பற்றிச் சீனாவிலிருந்தும் விபரங்கள் வெளியாகின்றன. ஆகக்குறைந்தது 12 நோயாளிகள் அந்தத் திரிபால் பாதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் கடும் நோயாளிகளாகினார்கள். முன்னர் காணப்பட்ட திரிபுகளினால் பாதிக்கப்பட்டவர்களில் 2 – 3 % விகிதமானவர்களே நோயால் பாதிக்கப்பட்டபின் அத்தனை வேகமாகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினார்கள், என்கிறார் குவான் ஸியாண்டொங் என்ற குவாங்ஸூ நகரப் பல்கலைக்கழகத்தின் கடும் நோய் ஆராய்ச்சியகத்தின் நிர்வாகி.

சீனாவின் தென்பகுதியிலிருக்கும் குவாங்டொங் மாவட்டத்தில் டெல்டா திரிபு பலரிடம் காணப்பட்டதால் பெருமளவில் மக்களிடையே தொற்றுப் பரிசோதனை நடந்துவருகிறது. அந்த மாவட்டத்தின் தலைநகரான  குவாங்ஸூ நகரில் தான் அது அதிகம் காணப்பட்டிருக்கிறது. அது காணப்பட்ட 100 பேரில் 96 பேருக்கு அது தொற்றியிருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 

சாள்ஸ் ஜெ.போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *