ஆசியாவின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய போதைப் பொருள் சங்கிலியின் தலைவன் பிடிபட்டான்.
சர்வதேச ரீதியில் தேடப்படுகிறவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சீன – கனடியக் குடிமகன் ஸே சி லொப் [Tse Chi Lop] என்பவரை நெதர்லாந்து பொலீஸ் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கைது செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆசியாவில் என்றுமில்லாத ஒரு பெரிய போதைப் பொருள் சாம்ராச்சியத்தின் தலைவன் ஸே சி லொப் என்று ஓரிரு வருடங்களுக்கு முன்னர்தான் தெரியவந்தது.
சாம் கோர் சிண்டிகேட் என்றழைக்கப்படும் போதைப் பொருள் சாம்ராச்சியத்தை மக்காவ், ஹொங்கொங்க் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை மையமாக வைத்து இயக்கிவருபவன் ஸே சி லொப் ஆகும். எல் சாப்போ குஸ்மான், பௌலோ எஸ்கோபார் போன்ற சர்வதேசப் பிரபல தென்னமெரிக்க போதைப் பொருட்கள் சாம்ராச்சியத்தின் தலைவர்களை விட அதிகமான அளவில் ஸே சி லொப் போதைப் பொருள் வியாபாரங்களை உலகளவில் செய்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இவன் மிகக் குறுகிய காலத்திலேயே இரசாயணப் பொருட்களிலான போதைப்பொருட்களில் (synthetic drugs)
பில்லியன் கணக்கில் வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தாலும் தனது அடையாளத்தை வெளிவராமல் கவனித்துவந்திருக்கிறான்.
ஹொங்கொங், மக்காவ், தாய்வான் ஆகிய நாடுகளில் வாழ்ந்துவந்த ஸே சி லொப்பை சில வருடங்களாக ஆஸ்ரேலியா கண்காணித்து வந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இவன் எப்போதும் தனது சொந்த விமானத்தில் தனிப்பட்ட பாதுகாவலர்களுடன் பயணம் செய்து வந்திருக்கிறான். ஆஸ்ரேலியாவில் புழங்கும் 70 விகிதமான போதைப்பொருட்களை இவனே விற்பதாக ஆஸ்ரேலியா குறிப்பிடுகிறது. நெதர்லாந்து அரசிடமிருந்து ஸே சி லொப்பை தமது நாட்டுக் கொண்டுவந்து நீதியின் முன்னால் நிறுத்த ஆஸ்ரேலியா பிரயத்தனம் செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்