கொவிட் 19, எவருடைய உயிரையும் குடிக்காத நாடு கிரீன்லாந்து.
ஐரோப்பாவின் வடக்கிலுள்ள கிரீன்லாந்து தீவில் சனத்தொகை 57,000. அங்கே சுமார் 30 பேருக்குக் கொரோனாத் தொற்று உண்டாகியிருந்தது. ஆனால், எவரும் இதுவரை இறக்கவில்லை. 2020 இல் கொரோனாத் தொற்றுக்கள் ஐரோப்பாவில் ஆரம்பித்ததுமே நாட்டுக்குள் வருகிறவர்களுக்கு கிரீன்லாந்து கடுமையான தனிமைப்படுத்தல், பரீட்சித்தல் போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துவிட்டது.
“எங்கள் நாடு ஒரு தீவு என்ற விடயத்தை நாம் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினோம்,” என்கிறார் தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் ஹென்ரிக் ஹான்ஸன். கிரீன்லாந்தின் தலைநகரில் மட்டுமே கொவிட் 19 நோயாளிகளைப் பேணக்கூடிய மருத்துவ வசதிகள் இருக்கின்றன. சுகவீனமடைந்த 30 பேரில் எவருமே கடுமையாகப் பாதிக்கப்படாததால் நாட்டின் மருத்துவ சேவை தொடர்ந்தும் மற்றைய கடுமையான நோயாளிகளை வழக்கம்போல பேண முடிகிறது.
அத்துடன் கிரீன்லாந்தின் சமூகங்கள் தலைநகரிலிருந்து கணிசமான தூரங்களில் இருக்கின்றன. அவைகளுடன் ஒழுங்கான போக்குவரத்து இல்லை. அதனால் தலைநகரைத் தவிர்ந்த வேறிடங்களுக்குத் தொற்றுப் பரவாமல் தடுக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் தற்போது தடுப்பு மருந்துகளை நாடெங்கும் விநியோகிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. கடுமையான குளிரில் பாதுகாத்து வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுபோகவேண்டிய Pfizers/Biontech நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் கிரீன்லாந்துக்கு ஒரு சவாலாக இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்