ஒரேயடியாக 350 பேருக்கு மரண தண்டனை கொடுக்க ஈராக்கிய ஜனாதிபதி உத்தரவு.
கடந்த வாரத்தில் பக்தாத் சந்தையில் வெடித்த இரண்டு தற்கொலைக் குண்டுக்காரர்களால் சுமார் 32 பேர் இறந்தார்கள். நீண்டகால அமைதிக்குப் பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்செயலால் கொதித்துப்போன மக்களின் கோரிக்கையை மறுக்க முடியாமல் பல தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஈராக்கிய ஜனாதிபதி பர்ஹாம் சாலெ உத்தரவிட்டிருக்கிறார்.
நிறைவேற்றப்படவிருக்கும் 350 மரண தண்டனைகளில் சிறையிலிருக்கும் தீவிரவாதிகளும், மற்றைய குற்றவாளிகளும் அடங்கும். வழக்குகளும், தீர்ப்புக்களும் சர்வதேசச் சட்டங்களுக்கு இணங்கவே நடாத்தப்பட்டதாக ஈராக்கிய அரசு கூறுகிறது.
மத்திய கிழக்கில் இஸ்லாமியக் காலிபாத்தை அமைப்பதற்காக மிலேச்சத்தனமாகப் போரில் ஈடுபடும் ஐ.எஸ் அமைப்பு ஷீயா முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்குகிறது. சந்தை கூடுமிடத்தில் சுகவீனமுள்ளவனாக நடித்த முதலாவது தற்கொலைக் குண்டுக்காரன் தனக்கு உதவ வந்தவர்கள் அருகே வந்ததும் குண்டை வெடித்தான். அக்குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வந்தவர்கள் அந்த இடந்தை நெருங்கியதும் இரண்டாமவன் இன்னொரு குண்டை வெடித்தான் என்று குறிப்பிடப்படுகிறது.
நடந்த செயலாம் ஈராக்கிய மக்களிடையே ஐ.எஸ் அமைப்பின் மீது கடும் கோபம் ஏற்பட்டிருக்கிறது. நீண்ட காலமாகவே ஈராக்கிய அரச படைகளால் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த இயக்கத்தினர் பலருக்கும் மரண தண்டனை வழங்கும்படி மக்கள் கோர ஆரம்பித்திருக்கிறார்கள்.
2003 இல் ஈராக்கில் மரண தண்டனைகளை நிறைவேற்றுதல் நிறுத்தப்பட்டது. ஆனால், அது 2004 இல் வந்த புதிய அரசினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஈராக்கியச் சிறைகளில் பல நூற்றுக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்