அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துக்கெதிராகக் கடும் விமர்சனச் சூறாவளி எழுந்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் 60 விகிதமானவையைக் கொடுக்குமளவுக்குத் தம்மிடம் தயாரிப்பு இல்லை என்று அஸ்ரா ஸெனகா சமீபத்தில் அறிவித்திருந்தது. அதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் நிறுவனத்தைக் கடும் விமர்சனம் செய்திருக்கிறது. இத்தாலி அந்த நிறுவனத்தை நீதிமன்றத்திலும் நிறுத்தத் தயாராகியிருக்கிறது.
அதே சமயம், அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுமார் 10 விகித பாதுகாப்பையே கொடுக்கிறது எனவே, அது அவ்வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பிரயோசனம் தராது என்று ஜெர்மனிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. அது பொய்யென்று அஸ்ரா ஸெனகா நிறுவனம் ஏற்கனவே The Lancet
இல் வெளிவந்த ஆராய்ச்சி விபரங்களைக் காட்டுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிடப்பட்ட தனது தடுப்பு மருந்து விநியோகத்தைப் பொதுமக்களுக்கு ஆரம்பிப்பதற்கு அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்து ஒன்றியத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்படுவது அவசியம். ஏனெனில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகளும் கடும் குளிரில் பாதுகாக்கப்படவேண்டியிருப்பதால் அவைகளைப் பேணுவதும், ஐரோப்பாவின் மூலை முடுக்குகளுக்கு எடுத்துச் செல்வதும் கடினமாக இருப்பதாகத் தெரியவருகிறது.
அஸ்ரா ஸெனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் ஏற்கனவே ஐக்கிய ராச்சியம், இந்தியா உட்பட சில நாடுகளில் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டு, விநியோகிக்கப்படவும் ஆரம்பித்துவிட்டன. ஏற்கனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டு உதவிகளைப் பெற்ற அந்த நிறுவனம் தனது பெல்ஜியத் தயாரிப்பில் ஏற்பட்டிருக்கும் இடர்களால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதைக் குறைத்திருப்பதால் கோபமடைந்திருக்கும் ஒன்றியத் தலைவர் ஒன்றியத் தயாரிப்பிலிருந்து பிரிட்டனுக்கு அனுப்பப்படும் தடுப்பு மருந்துகளைத் தடுக்கவும் தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்