எமிரேட்ஸின் கொரோனாத்தொற்று அதிகரிப்பும், ஆரோக்கிய சேவைகளின் தலைமையில் மாற்றமும்.
அவார் சகீர் அல்-கெப்தியை எமிரேட்ஸ் மன்னன் நாட்டின் புதிய மக்கள் ஆரோக்கிய சேவைகளுக்குப் பொறுப்பாக நியமித்திருக்கிறார். சமூக விலகல், முகக்கவசம் அணிதல் தவிர்ந்த சகல கொரோனாக்கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட எமிரேட்ஸில் கடந்த வாரங்களில் மூன்று மடங்காக நாட்டின் கொரோனாத்தொற்றுக்கள் அதிகரித்திருக்கின்றன.
திங்களன்று 3,579 பேருக்கு தொற்றுக்களும் ஒன்பது இறப்புகளும் அறிவிக்கப்பட்டன. சுமார் 10 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட எமிரேட்ஸில் 2.5 மில்லியன் பேர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மார்ச் மாத முடிவுக்குள் நாட்டின் 9 மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்கவேண்டுமென்று எமிரேட்ஸ் திட்டமிட்டிருக்கிறது.
டுபாயின் உணவகங்கள் முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு 10 விகிதக் கழிவையும் இரண்டு ஊசியையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு 20 விகிதக் கழிவையும் கொடுத்து வருகின்றன. அது ஒரு வியாபாரத் தந்திரம் என்றாலும் மக்களைத் தடுபூசி பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கவும் உதவுமென்று சமூகவலைத்தளங்களில் பேசப்படுகிறது.
கடந்த வாரம் Pfizer BioNTech நிறுவனம் தனது தடுப்பு மருந்துகள் அனுப்புவதன் எண்ணிக்கையை எல்லா நாடுகளுக்கும் குறைத்திருப்பதால் எமிரேட்ஸில் சினோபார்ம் தடுப்பு மருந்து மட்டும் இலவசமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்