ஸ்பெயினில் இனவாதம், நிறவாதம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகிறது.
ஸ்பெயின் நாட்டின் சமத்துவத்தைப் பேணும் அமைச்சின் கணிப்பீட்டின்படி சமீப வருடங்களில் ஸ்பானியாவில் நிறம், இனம் பார்த்து மனிதர்களை நடத்துவது அதிகமாகி வருவதாகத் தெரியவருகிறது. முக்கியமாக வாடகை வீடுகள், கல்வித்துறை ஆகியவற்றில் அதிகமாக அது பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
வாடகைக்கு வீடு தேடியவர்களில் மூவரில் ஒருவர் தமது இனம், மதம், நிறம் கவனிக்கப்பட்டு அது மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள். கல்விக்கூடங்களில் இனம், மதம், நிறம் போன்றவைகள் பற்றிய சுட்டிக்காட்டல்களுடனான நகைச்சுவைகள் அதிகரித்திருக்கின்றன. அக்காரணங்களுக்காக குறிப்பிட்ட சிறுபான்மை மாணவ, மாணவியர் விளையாட்டுக்கள், நிகழ்ச்சிகளிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகின்றனர்.
சமூக நடத்தைகளிலும் இன, நிற வாதங்கள் பல கூற்றுக்களிலும் கவனிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சிறுபான்மை மக்கள் பற்றிய இழிவான கருத்துக்களைப் பொதுவில் உச்சரிப்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அப்படியானவைகளைச் சமூகவலைத்தளத்தில் பரிமாறி அவை பரவி வருகின்றன.
ஆபிரிக்கர்களும், ரோமர்களும் குறிப்பாகத் தாக்கப்படும் சிறுபான்மையினராக இருக்கின்றனர். வலது சாரி நிறவாதக் கட்சிகள் அவர்கள் பற்றிய எதிர்மறைக் கருத்துக்களைச் சமூகத்தில் பரப்பி அவை அரசியல்வெளியிலும் பரவியிருப்பதாக ஸ்பெயின் அரசு குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்