“உங்கள் எரிவாயுவை நாம் மொரொக்கோவுக்கு விற்கமாட்டோம்,” என்று அல்ஜீரியாவுக்கு உறுதியளித்தது ஸ்பெய்ன்.

உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் எரிவாயுவை வாங்குவதைத் தவிர்க்க வேறு நாடுகளிடம் அந்தச் சக்திக்காக அலைகிறார்கள். ஸ்பெய்ன் நீண்ட காலமாகவே அல்ஜீரியாவிடம் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் நாடு. அதேபோல பக்கத்து நாடான மொரொக்கோவுக்கும் நேரடிக் குளாய் மூலம் எரிவாயுவை விற்றுவந்தது அல்ஜீரியா. ஆனால், அந்த 25 ஆண்டு ஒப்பந்தத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முறித்துக்கொண்டது அல்ஜீரியா. காரணம் மொரொக்கோவுடன் மேற்கு சஹாரா பிராந்தியம் சம்பந்தமாக நீண்டகாலமாக வளர்ந்து வந்திருக்கும் பகையாகும்.

தனது நட்பு நாடான மொரொக்கோவுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள உதவுவதாக சமீப வாரத்தில் ஸ்பெய்ன் உறுதிகொடுத்திருந்தது. அதையடுத்து அல்ஜீரியா தனது எரிவாயுவை ஸ்பெய்ன் வாங்கி மொரொக்கோவுக்கு விற்குமானால் ஸ்பெய்னுக்குத் தாம் எரிவாயும் விற்பதை நிறுத்திக்கொள்வதாக மிரட்டியிருக்கிறது.

“எந்தக் காரணம் கொண்டும் அல்ஜீரியாவின் எரிவாயுவை மொரொக்கோவுக்கு விற்கப்போவதில்லை,” என்று ஸ்பெய்ன் உறுதியளித்திருக்கிறது. 

காற்றாடி, சூரியசக்தி ஆகியவற்றின் மூலம் எரிசக்தியைப் பெற்றுக்கொள்வதில் ஸ்பெய்ன் பெருமளவு முன்னேறியிருக்கிறது. ஆயினும், அத்தயாரிப்பு நாட்டுக்குத் தேவையான முழு எரிசக்தியையும் இன்னும் கொடுக்கவில்லை. எனவே எரிவாயுவை வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஸ்பெய்ன். அவற்றில் கால்பங்கை அல்ஜீரியாவிடமிருந்து ஸ்பெய்ன் வாங்கிக்கொள்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *